விஐபி தொகுதியாக போகிறதா இராமநாதபுரம்

இராமநாதபுரம் மாவட்டம் மிக பாரம்பரியமானது. இந்தியாவையே பிரமிக்க வைத்த மாபெரும் அணு விஞ்ஞானி மற்றும் குடியரசுத்தலைவரான மேதகு அய்யா அப்துல் கலாம் என்ற உயரிய மாமனிதரை தந்த இடம்.

புனித காவியமான இராமயணத்தின் பெரும்பகுதி நடந்த மண் இந்த மண்ணே. இங்கு பாரம்பரியமான கோவில்கள், சர்ச், மசூதிகள் என பல உண்டு.

ஹிந்துக்களின் தேசிய புண்ணியஸ்தலமான இராமேஸ்வரம் இராமநாதசுவாமி கோவில் இங்கு இருப்பதால் இந்த மண்ணுக்கு கொஞ்சம் கூடுதல் பெருமை.

காசிக்கு அடுத்து ராமேஸ்வரம் என்ற தாத்பர்யம் இருப்பதால் இந்திய அளவில் பலரும் வந்து செல்லும் மாவட்டமாக இது உள்ளது.

மேலும் சேதுக்கரை, திருப்புல்லாணி, தேவிபட்டினம், திரு உத்திரகோசமங்கை, ஏர்வாடிதர்ஹா, ஓரியூர் சர்ச், அரியமான் வெள்ளை மணல் பீச், என சுற்றுலா சார்ந்தும் சிறப்பான முறையில் உள்ளது இம்மாவட்டம்.

அதிமுக கூட்டணியில் இராமநாதபுரம் பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. வெறும் ஐந்து தொகுதிதான் என்பதால் பிஜேபியில் உள்ள மேல்மட்ட தலைவர்களிடையே கடும் போட்டி நிலவுகிறது.

இதில் இராமநாதபுரத்தில் நிற்பதற்கு பிஜேபியின் தேசிய அளவிலான தலைவர்கள் நிற்பதற்கும் சாத்தியம் உள்ளதாக கூறப்படுகிறது.

வட இந்தியர்கள் பெரிதும் மதிக்கும் ராமேஸ்வரம் சார்ந்த தொகுதி என்பதால் இத்தொகுதியில் போட்டியிட தேசிய பிரபலங்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.

இப்போதைக்கு பாரதிய ஜனதாவின் முன்னாள் எம்.பி வேட்பாளர், குப்புராம், பாஜகவில் புதிதாக சேர்ந்த நெல்லையை சேர்ந்த முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன், டெல்டா மாவட்டங்களில் அசைக்க முடியாத பிஜேபி தலைவர் கருப்பு முருகானந்தம், போன்றோர் பெயர்களும் வேட்பாளர் பட்டியலில் அடிபடுகிறது. இது போக பிஜேபி இளைஞர் அணியில் இருப்பவரும் முக நூலில் அடிக்கடி அரசு சார்ந்த வீடியோக்களையும், எதிர்க்கட்சிக்கு பதிலடி கொடுக்கும் வீடியோக்களையும் வெளியிடும் புதுமுகம் டி.எஸ்.பி என்று அழைக்க கூடிய டி.எஸ் பாண்டியராஜன் என்ற வழக்கறிஞருக்கும் வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது.

பிஜேபியின் பெரிய தலைவர்களும் இத்தொகுதியில் போட்டியிட இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. சென்ற முறை பிரதமர் மோடி இரண்டு தொகுதியில் சென்ற முறை போட்டியிட்டார். அதில் ஒன்று காசி நகரத்தை உள்ளடக்கிய வாரணாசி. அது போல் இம்முறை புண்ணிய நகரமான ராமேஸ்வரம் சார்ந்த ராமநாதபுரம் தொகுதியிலே பிரதமர் மோடியே கூட போட்டியிடலாம் என்று மக்களிடையே பேச்சு நிலவுகிறது. இல்லை என்றால் ராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமன் போட்டியிட இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

மக்கள் நீதி மய்யம் கட்சியை நடத்தி வரும் நடிகர் கமல்ஹாசனின் சொந்த ஊர் இது என்பதால் அவரும் இத்தொகுதியில் களமிறங்கலாம் என தெரிகிறது.

எது உண்மை என வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டால்தான் தெரிய வரும்.

எது எப்படியோ யாராவது விஐபி போட்டியிட்டாலாவது அனைத்து வளங்களும் இருந்தும், மிகவும் பின் தங்கிய இராமநாதபுரம் மாவட்டம் பல வழிகளில் முன்னேற்றத்தை அடையும் என்பது பலர் எதிர்பார்ப்பு.