வடசென்னை திரைவிமர்சனம்

vadachennai

 vadachennai

படத்தின் தொடக்கத்தில் ஒரு கொலை நடக்கிறது. சமுத்திரக்கனி, கிஷோர், பவன் குமார், சாய் தீனா ஆகிய நால்வரும் சேர்ந்து செய்யும் இந்த கொலையால் நேரடியாக ஆண்ட்ரியாவும், மறைமுகமாக தனுஷும் பாதிக்கப்படுகிறனர். நால்வரும் சேர்ந்து யாரை கொலை செய்தனர், இந்த கொலைக்கு பின் நால்வருக்கும் நடக்கும் விபரீதங்கள் என்ன? என்பதே இந்த படத்தின் மீதிக்கதை

சிறுவயது தனுஷில் அனேகன் சாயலும், இளவட்ட தனுஷில் புதுப்பேட்டை சாயலும், கொஞ்சம் முதிர்ச்சியான தனுஷில் ஆடுகளம் சாயலும் தெரிகிறது. தனுஷ் ஒவ்வொரு படத்திலும் தனது நடிப்பு திறமையை மெருகேற்றி கொண்டே வருகிறார். இந்த படத்திற்கு இன்னுமொரு தேசிய விருது கிடைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை

நாயகி ஐஸ்வர்யா ராஜேஷுக்கு ஆரம்பத்தில் கொஞ்சம் துடுக்குத்தனமான கேரக்டர். வடசென்னை தமிழை அப்படியே அச்சு அசராமல் பேசி நடித்துள்ளார்.

இந்த படத்தில் ராஜன் கேரக்டர் மிக அழுத்தமான, ஆழமான கேரக்டர். ஆனால் அமீர் அந்த கேரக்டருக்கு கொஞ்சம் கூட செட் ஆகவில்லை. தொடக்கத்தில் திட்டமிட்டபடி இந்த கேரக்டரில் விஜய்சேதுபதி நடித்திருந்தால் படம் வேற லெவலில் இருந்திருக்கும்

ஆண்ட்ரியா வித்தியாசமான பழிவாங்கும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இவருடைய கேரக்டரின் சஸ்பென்ஸ் நன்றாக இருந்தாலும் இவர் இன்னும் நல்ல நடிப்பை கொடுத்திருக்கலாம். மேலும் இவருடைய டப்பிங் மிக மோசமாக உள்ளது.

மேலும் டேனியல் பாலாஜி, பவன்குமார், கருணாஸ், பாவல் நவகீதன் ஆகியோர்கள் தங்கள் கேரக்டரை உணர்ந்து நடித்துள்ளனர். ராதா ரவி அரசியல்வாதியாக முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

சந்தோஷ் நாராயணன் இசையில் பாடல்கள் அனைத்தும் செம ஹிட், பின்னணி இசையில் மிரட்டியிருக்கிறார். வேல்ராஜின் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்திருக்கிறது.

பொல்லாதவன், ஆடுகளம் படங்களில் யதார்த்தமான காட்சிகளின் மூலம் திரைக்கதையை நகர்த்திய இயக்குநர் வெற்றிமாறன் இந்த படத்திலும். வடசென்னையில் வாழும் மக்களின் இயல்பான வாழ்க்கையை பதிவு செய்துள்ளார். வடசென்னை மக்களின் சுற்றுச்சூழல், பேச்சு, அடிதடி சண்டை, கெட்ட வார்த்தைகள் என அத்தனையும் இந்த படத்தில் உண்டு. குறிப்பாக ‘மகாநதி’ படத்திற்கு பின்னர் இந்த படத்தில் தான் சிறைக்காட்சி சிறப்பாக உள்ளது.

மொத்தத்தில் தனுஷ், வெற்றிமாறன் கூட்டணி மீண்டும் அதகளப்படுத்தியுள்ளது.

ரேட்டிங்: 3/5