இயக்குனர் பாக்யராஜ் பிறந்த நாள் இன்று


தமிழ்த்திரையில் தோன்றிய நட்சத்திரங்களில் ஒரு அரிதான நட்சத்திரம் பாக்யராஜ். கொங்கு தேசத்தில் இருந்து சென்னைப்பட்டணத்திற்கு வந்து தனது அரிய திரைச்சாதனைகளால் மனதை குளிர்வித்தவர் கே.பாக்யராஜ் அவர்கள்.

இயக்குனர் இமயம் பாரதிராஜா அவர்களிடம் இணை இயக்குனராக பணியாற்றியவர் பாக்யராஜ். சிகப்பு ரோஜாக்கள் உள்ளிட்ட படத்தில் மிக ஒல்லிய தேகத்துடன் நடித்திருப்பார் பாக்யராஜ்.

அவ்வப்போது பாரதிராஜாவின் படங்களில் சில முக்கியத்துவமில்லாத வழிப்போக்கர் கதாபாத்திரங்களுக்கு குரல் கொடுத்திருப்பார்.

முதன் முதலில் தன்னுடைய குருநாதர் பாரதிராஜா படமான புதிய வார்ப்புகள் படத்தில் ஹீரோவாக நடித்ததால் எல்லோராலும் அறியப்பட்டார்.

தொடர்ந்து அனைவரும் ரசிக்கும்படியான சிறந்த திரைக்கதையுள்ள படங்களை இயக்கியதன் மூலம் தாய்மார்களின் பேவரைட் நடிகர் அண்ட் இயக்குனர் ஆனார் பாக்யராஜ்.

இவர் இயக்கிய முந்தானை முடிச்சு படத்தை தயாரித்த ஏவிஎம் நிறுவனமே ஆச்சரியப்படும் வகையில் மிகப்பெரிய வெற்றியை அடைந்த திரைப்படம் பாக்யராஜ். மல்டிப்ளெக்ஸ் தியேட்டர்கள் இல்லாத அந்த காலத்தில் , டிக்கெட் விலை சாதாரணமாக இருந்த அந்த காலத்தில் பெண்கள் கூட்டங்களால் நிரம்பி வழிந்தது.

1983ல் வெளியான இப்படம் மிகப்பெரும் வெற்றி வாகை சூடியது.

பாக்யராஜ் நடிப்பில் சி.ஐ.டி சேலம் சிங்காரமாக வித்தியாசமான ரோலில் நடித்த இயக்குனர் பாக்யராஜுக்கு அந்த படம் சிறப்பானதொரு அங்கீகாரத்தை அளித்தது. இது போல் பெண்களால் அந்த நேரங்களில் விரும்பி பார்க்கப்பட்ட படம் விதி.

தாய்மார்களின் பேவரைட்டான பாக்யராஜ் இப்படத்தில் ஒரு காட்சியிலாவது நடித்தால் சிறப்பாக இருக்கும் என இயக்குனர் கருதியதாலோ என்னவோ ஒரு போஸ்ட்மேன் கதாபாத்திரத்தில் சிறியகாட்சியில் வந்து கலக்கு கலக்கு என கலக்குவார்.

படத்தில் நகைச்சுவை காட்சி போல வரும் இந்த சிறிய காட்சி மிக புகழ்பெற்றது. அது போல் பாக்யராஜ் நடிப்பில் சசிமோகன் இயக்கத்தில் வந்த ருத்ரா என்ற திரைப்படம் பேங்க் கொள்ளையடிக்கும் ஒரு காட்சி கிட்டத்தட்ட 5 நிமிடத்துக்கு மேல் படத்தில் வரும் இந்த காட்சி மிக ரசனையாகவும் புத்திசாலித்தனமாகவும்,நகைச்சுவையாகவும் படமாக்கப்பட்டிருந்தது.

பாக்யராஜின் நடிப்பு அமிதாப்பச்சனுக்கு மிக பிடிக்கும் அதனால் இந்தியாவின் சிறந்த திரைக்கதையாளர் என்று பாராட்டப்பெற்றார். 60, 70களில் வந்த பல படங்கள் பெண்களுக்கு பிடித்த வகையில் அழுகை படங்களாக வந்தது. 80களில் வந்த படங்கள் ஆக்சன் படங்களாக வந்தது. பாக்யராஜின் படங்கள் அழுகை, ஆக்சன், நகைச்சுவை என எல்லாம் கலந்து வந்ததால் அனைவராலும் பாராட்டு பெற்றது.

பாக்யராஜ் நடித்த இது நம்ம ஆளு படம் ஜாதி கொடுமையையும் வேற்றுமைகளையும் ஜாலியாக சொன்ன படம் ஜாதி கொடுமையை ஜாலியாக சொல்ல முடியுமா ? அதுதான் பாக்யராஜின் திரை ஆளுமை. படத்தை இயக்கி இருந்தவர் எழுத்தாளர் பாலகுமாரன்.

பாக்யராஜ் எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகர், அவர் நடித்து டிராப் ஆன ஒரு படத்தின் சில காட்சிகளை  எம்.ஜி.ஆரின் மறைவுக்கு பிறகு தனது அவசர போலீஸ் 100 படத்தில் சேர்த்து எம்.ஜி.ஆருடன் இணைந்து நடிக்கும் தனது ஆவலை தணித்துக்கொண்டார்.

ஆராரோ ஆரிரரோ, சுந்தர காண்டம், ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி என பாக்யராஜின் கதை ஆளுமையையும் நடிப்பு ஆளுமையையும் சொல்லிக்கொண்டே போகலாம்.