டி.என்.பி.எல். கிரிக்கெட்: காஞ்சி வீரன்ஸை வீழ்த்தி திண்டுக்கல் அணி வெற்றி

4-வது டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரில் நத்தத்தில் நேற்றிரவு அரங்கேறிய 23-வது லீக் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ்-காஞ்சி வீரன்ஸ் அணிகள் சந்தித்தன. ‘டாஸ்’ ஜெயித்த காஞ்சி வீரன்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. முதலில் ஆடிய காஞ்சி வீரன்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக விஷால் வைத்யா, எஸ்.அருண் ஆகியோர் களம் இறங்கினார்கள்.



எஸ்.அருண் 12 ரன்னில், அபினவ் பந்து வீச்சில் போல்டு ஆனார். அடுத்து வந்த கேப்டன் பாபா அபராஜித் 1 ரன்னிலும், சஞ்சய் யாதவ் 2 ரன்னிலும், பிரான்சிஸ் ரோகின்ஸ் 2 ரன்னிலும், ஆர்.சதீஷ் 10 ரன்னிலும் ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டம் இழந்து ஏமாற்றம் அளித்தனர்.

டி.என்.பி.எல். கிரிக்கெட்: காஞ்சி வீரன்ஸை வீழ்த்தி திண்டுக்கல் அணி வெற்றி

நிலைத்து நின்று ஆடிய விஷால் வைத்யா 41 பந்துகளில் 4 பவுண்டரி, 3 சிக்சருடன் 51 ரன்கள் எடுத்த நிலையில் அபினவ் பந்து வீச்சில் ஹரிநிஷாந்திடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

அடுத்து களம் கண்ட ஹரிஷ் 8 ரன்னிலும், தாமரைகண்ணன் 10 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் காஞ்சி வீரன்ஸ் அணி 8 விக்கெட் இழப்புக்கு 133 ரன்கள் எடுத்தது.

பின்னர் 134 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய திண்டுக்கல் அணியின் தொடக்க ஆட்டக்காரர் என்.ஜெகதீசன் 21 ரன்னிலும், சுமந்த் ஜெயின் 8 ரன்னிலும், கேப்டன் ஆர்.அஸ்வின் 8 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர்.

18.1 ஓவர்களில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 134 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஹரி நிஷாந்த் 61 ரன்னும், ஆர்.விவேக் 26 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.


6-வது ஆட்டத்தில் ஆடிய திண்டுக்கல் அணி தொடர்ச்சியாக பெற்ற 6-வது வெற்றி இதுவாகும்.