துலாம் ராசி ராகு – கேது பெயர்ச்சி பலன்கள் 2019!

இந்த 2019 வருடம் திருக்கணிதம் முறைப்படி ராகு-கேது பெயர்ச்சி மார்ச் 6-ம் தேதி நடைபெற இருக்கின்றது. கடகம் ராசியில் இருக்கின்ற ராகு பகவான் பெயர்ச்சியாகி மிதுனம் ராசியில் சஞ்சரிக்க போகின்றார். மகரம் ராசியில் சஞ்சரித்த கேது பெயர்ச்சியாகி தனுசு ராசியில் சஞ்சரிக்க போகின்றார். இனி ஒன்பதாம் இடத்தில் இருக்கின்ற ராகுவும், மூன்றாம் இடத்தில் இருக்கின்ற கேதுவும் என்ன பலன்களை தரப் போகின்றார் என்பதை விரிவாக காணலாம்.

Thulam ragu kethu peyarchi 2019

பொதுவான பலன்கள்:

இந்த ராகு-கேது பெயர்ச்சி துலாம் ராசியினருக்கு முன்னேற்றத்தையும், பொருளாதார வளர்ச்சியையும் தர போகின்றது. ஒன்பதாம் இடத்தில்  இருக்கின்ற ராகுவால் வெளியூர் அல்லது வெளிநாடு செல்ல வாய்ப்புகள் வரக்கூடும். படித்து முடித்து நல்ல வேலை தேடிக் கொண்டு இருப்பவர்களுக்கு நல்ல நிறுவனத்தில் இருந்து அழைப்பு வரக்கூடும். தந்தை வழி உறவுகள் இடையே ஏற்பட்ட பகை மறைந்து ஒற்றுமை புலப்படும். பழைய வாகனத்தை விற்று புது வாகனம் வாங்குவீர்கள்.

கேது பகவான் சனியோடு இணைந்து மூன்றாம் இடத்தில் சாதகமான நிலையில் இருக்கின்ற பொழுது தாராளமான தனவரவு கொடுப்பார். சிலருக்கு மறைமுகமான வழிகளில் அளவற்ற செல்வத்தைக் கொடுத்து ஆச்சரியப்படுத்துவார். கேது சனியோடு இணைந்து மூன்றாம் இடத்தில் இருக்கின்ற பொழுது உடன்பிறப்புகளுடன் இருந்து வந்த கருத்து வேறுபாடு மறைந்து ஒற்றுமை புலப்படும். இதுவரை திருமணம் ஆகாத துலாம் ராசியினருக்கு நல்ல வரன் அமையக்கூடும்.

இந்த ராகு-கேது பெயர்ச்சி துலாம் ராசியினருக்கு தானாகவே நல்லவை நடைபெறாது. நீங்கள் செயலில் முழுமுயற்சியுடன் ஈடுபட்டால் மட்டுமே நிகழ்த்த முடியும். துலாம் ராசியில் இருக்கின்றவர்கள் தயங்கி, மயங்கி, தேவையற்ற சிந்தனை செய்து கொண்டு இருக்காமல் சட்டென்று எழுந்து செயலில் ஈடுபடுங்கள்.

உத்தியோகஸ்தர்களுக்கு :

தனியார் துறையில் பணிபுரிகின்றவர்களுக்கு புதிய பதவி , வாய்ப்புகள் வரக்கூடும். சக ஊழியர்கள் உங்களுக்கு பக்க பலமாக இருப்பார்கள். அரசு வகையில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். வேலையின்றி இருப்பவர்கள் முயற்சி செய்தால் நல்ல வேலை அமையக்கூடும். வேலை விஷயமாக வெளியூர் அல்லது வெளிநாடு செல்ல வாய்ப்புகள் வரக்கூடும். ஊடுகத்துறை, எழுத்துத்துறை, ஸ்டாக் மார்க்கெட், டிரேடிங், ஏற்றுமதி இறக்குமதி, ஆன்லைன் சம்மந்தமான வேலை செய்கின்றவர்களுக்கு நல்ல லாபம் வரக்கூடும். பாதுகாப்பு துறையில் இருக்கின்றவர்கள் நல்ல வளர்ச்சி காண்பார்கள்.

வியாபாரம்/தொழில் பிரிவினர்கள்:

வியாபாரம் மற்றும் சொந்த தொழில் செய்து கொண்டு இருப்பவர்களுக்கு நல்ல லாபம் வரக்கூடும். இருக்கின்ற வியாபாரத்தை விரிவுப்படுத்துவதற்கு ஏற்ற காலமாக இருக்கின்றது. புதிய இயந்திரங்கள், கடைக்கு தேவையான பொருட்களை வாங்க போதிய பணம் கிடைக்கும். மறைமுக எதிர்ப்புகள் தோன்றக்கூடும். செய்கின்ற வியாபாரத்தில் போட்டி, பொறாமைகள் தோன்றக்கூடும்.

மாணவ – மாணவியர்கள்:

மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். குருவின் அதிசார காலங்களில் சற்று சிரத்தை எடுத்து படிக்க வேண்டும். ஆசிரியர்களின் ஆலோசனை கிடைக்கும்.

குடும்பம்:

இல்லத்தில் இனிமையான சூழல் உருவாகும். இல்லத்தில் இருப்பவர்களுடன் புனித ஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள். ஆடை, அணிகலன்கள், விலையுர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உங்களை சரியாக புரிந்து கொள்ளாமல் இருந்த உறவினர்கள், உங்களின் மேன்மையை அறிந்து கொண்டு உங்களிடம் சரணடையும் நிலை உருவாகும்.

உடல்நலம்:

உடல் நலம் சிறப்பாக இருக்கக்கூடும்.

வணங்க வேண்டிய தெய்வம்:

செவ்வாய்க்கிழமை அல்லது வெள்ளிக்கிழமையில் காளியை மனதார வழிபட்டு வாருங்கள். மேலும் சுபகாரியத் தடைகள் விலக குலதெய்வ வழிபாட்டையும், நவகிரகங்களில் இருக்கின்ற குருவையும் வழிபாடு செய்யுங்கள்.