திருப்பாவை பாடல்களும் விளக்கமும் – 1

 

69ccd4127ecf89966c7e6925f7e20039-1

மார்கழி என்றதும் கடுங்குளிரும், அந்த குளிரிலும் போடப்படும் கோலமுமே நம்ம பிள்ளைகளுக்கு தெரியும். இன்னும் கொஞ்சம் பிள்ளைகளுக்கு ஓசோன் படலம் பத்தி தெரியும். ரொம்ப சில பேருக்கு மட்டுமே ஆண்டாளையும், திருப்பாவையையும் தெரியும். அது அவங்க தப்பில்லை. அப்படி சொல்லிக்கொடுத்து வளர்க்காதது நமது தப்பே!

013cc11e402eb7adecf5daa9e31aa4b7

நாலாயிர திவ்ய பிரபந்தம் என்பது பெருமாளை பற்றி 6 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தஆழ்வார்களால் பாடப்பட்ட பாடல்கள், 10 நூற்றாண்டில் நாரதமுனி என்பவரால் தொகுக்கப்பட்ட தொகுப்பாகும்.  கிட்டத்தட்ட 4000 பாடல்களை கொண்ட இந்த தொகுப்பில் நாச்சியார் திருமொழின்னு ஆண்டாள் பாடிய பகுதியில் பாடல்கள் தொகுக்கப்பட்டிருக்கு. நாச்சியார் யார்ன்னு கேட்டால் பலருக்கும் தெரியாது. ஆனா, ஆண்டாள்ன்னு கேட்டால் தெரியும். நாச்சியாரே ஆண்டாள். ஆண்டாளே நாச்சியார். அவர் பாடிய பாடல்களில் பலவற்றில்ல் திருப்பாவை எனப்படும் 30 பாடல்களே மிகவும் பிரசித்தம். மார்கழி மாதம் முழுக்க நல்ல கணவன் அமைய வேண்டி பெண்கள் இருக்கும் பாவை நோன்பின்போது பாடப்படும் பாடல்களாகும்.

ஆண்டாள் பாடல்கள் அனைத்திலும் ஒரே எண்ணம்தான் நிறைந்த இருக்கும்.  கண்ணனையே மணக்க வேண்டியதே அந்த எண்ணம்.  ஆண்டாளை பத்தி தனிப்பதிவா பார்க்கலாம்.  ஆண்டாளின் திருப்பாவை முப்பது பாடல்களும் ‘சங்கத் தமிழ்மாலை’ எனப் போற்றப்படுகின்றன. திருப்பாவை என்பது பிற்காலத்தில் தோன்றிய பெயராய்கூட இருக்கலாம்.  முதலில் இதற்கு ‘சங்கத் தமிழ்மாலை’ என்றுதான் பெயர் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.
திருப்பாவையின் முப்பது பாடல்களையும் மார்கழி மாதத்தில் அனுசரிப்பது வைணவர்கள் வழக்கம்.

12225bf66d86efdf1c4f81b33775c468

இந்த முப்பது பாடல்களையும் மார்கழி மாதத்தில் பாடி நோன்பிருந்தால் நல்ல கணவன் அமைவான் என்பது நம்பிக்கை. அவசர யுகத்தில் இப்ப வீடியோக்கள் வடிவில் வந்துட்டதால் அதை ஒலி(ளி)க்கவிட்டு நோன்பு இருக்காங்க. காலையில் குளித்து முடித்து கோவிலுக்கு சென்றோ அல்லது வீட்டில் பூஜையறையிலோ இந்த பாடலை பாடினால் சிறப்பு.

அதனால், தினத்துக்கு ஒன்றாக காலையில் திருப்பாவை பாடல்களும், மாலையில் திருவெம்பாவை பாடல்களும் அதன் விளக்கத்தோடு இங்கு பதிவிடப்படும்.

09baba4e8f26a25b7a39e1bca482a66c

திருப்பாவை 1 பாடல்…

மார்கழி திங்கள் மதிநிறைந்த நன்னாளால்
நீராடப் போதுவீர்! போதுமினோ, நேரிழையீர்!
சீர்மல்கும் ஆய்பாடிச் செல்வச் சிறுமீர்காள்!
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்
ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்
கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல் முகத்தான்
நாரா யணனே நமக்கே பறைதருவான்
பாரோர் புகழப் படிந்தேலோ ரெம்பாவாய்!

88aaa3fdf37c35d045a5171a0cd0f25d

பாடலின் விளக்கம்..

அழகிய அணிகலன்களை அணிந்த கன்னியரே! சிறப்பு மிக்க ஆயர்பாடியில் வசிக்கும் செல்வ வளமிக்க சிறுமிகளே! மார்கழியில் முழுநிலா ஒளி வீசும் நல்ல நாள் இது. இன்று நாம் நீராடக் கிளம்புவோம். கூர்மையான வேலுடன் நம்மைப் பாதுகாத்து வரும் அரிய தொழிலைச் செய்யும் நந்தகோபன், அழகிய கண்களையுடைய யசோதாபிராட்டி ஆகியோரின் சிங்கம் போன்ற மகனும், கரிய நிறத்தவனும், சிவந்த கண்களை உடையவனும், சூரியனைப் போல் பிரகாசமான முகத்தையுடையவனும், நாராயணனின் அம்சமுமான கண்ணபிரான் நமக்கு அருள் தர காத்திருக்கிறான். அவனை நாம் பாடிப் புகழ்ந்தால் இந்த உலகமே நம்மை வாழ்த்தும்.

வாழிய பாரதம்!!

வாழிய நற்றமிழ்!!

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews