Connect with us

சுலபமான முறையில் சுய்யம் செய்வது எப்படி?

சமையல்

சுலபமான முறையில் சுய்யம் செய்வது எப்படி?

பள்ளியிலிருந்து பசியோடு வரும் பிள்ளைகளுக்கு கடையில் விற்கும் குர்குரே, லேஸ்,அதுஇதுன்னு வாங்கி கொடுப்பதுக்கு பதிலா  வீட்டுலயே செஞ்ச முறுக்கு, தட்டடை, போண்டா, உப்புருண்டை, கடலைமிட்டாய்ன்னு கொடுக்கலாம். கொஞ்சம் மெனக்கெட்டாலும் பிள்ளைகளை ஆரோக்கியமா வளர்க்கலாம். பிள்ளைகளுக்கு பிடிக்காதுன்னு சொல்லாதீங்க. நாம பழக்கப்படுத்தலைன்னு சொல்லுங்க. அதுவே சரியா இருக்கும்.

மாலைவேளையில் நொறுக்கித்தீனிக்காக சுய்யம் செய்றது எப்படின்னு பார்க்கலாம். ”சொய்யா உருண்டை” ன்னு எங்க ஊர் பக்கமும், சுய்யம்ன்னு மதுரை, நெல்லை, காரைக்குடி பக்கமும் சொல்லுற ஒரு பலகாரம்.

Suyyam recipe

இதோட பெயர் காரணம் என்னன்னு நீண்ட நாள் ஆராய்ச்சி செஞ்சு கண்ட உண்மை என்னன்னா, இந்த உருண்டை கலவையை எண்ணெயில போடும்போது “சொய்ய்ய்ய்ய்ய்ய்”ன்னு சத்தம் வர்றதால இந்த பேர் வந்துச்சு. யாருப்பா அங்க கல்லெடுக்குறது?! பேச்சு பேச்சாதான் இருக்கனும். சரி வாங்க போய் சமைக்கலாம். ஆளுக்கொரு வேலையா செஞ்சா சீக்கிரம் முடிச்சுடலாம். சாப்பிடும் ஆளை இல்லப்பா சமையலை!!

தேவையான பொருட்கள்:
பச்சை பயறு – கால் கிலோ
வெல்லம் – 150 கிராம்
ஏலக்காய் – 2
மைதா – 200 கிராம்,
ஆப்ப சோடா – ஒரு சிட்டிகை,
உப்பு – தேவையான அளவு,
எண்ணெய் – தேவையான அளவு.

pachai payaru

பச்சை வாசனை போகும்வரை பச்சைப்பயறை வெறும் வாணலியில பச்சை வாசனை போகும் வரை வறுத்துக்கனும். அப்படி வறுத்த பயறை, ஒரு பாத்திரத்துலிருக்கும் பச்சை தண்ணில சூட்டோடு சூடா கொட்டுங்க.

கல் மண் இல்லாம நல்லா கழுவி குக்கர்ல கொஞ்சம் உப்பு, தேவையான தண்ணி ஊத்தி குறைஞ்சது பத்து விசில் வரும் வரை வேக விடுங்க. திறந்து பார்த்து வேகலைன்னா மீண்டும் வேக வச்சுக்கோங்க. நல்லா வெந்திருக்கனும். ஆனா, குழைஞ்சுடாம இருக்கனும்.

suyyam seivathu eppadi

வெந்த பச்சை பயறை தண்ணி இல்லாம வடிச்சு ஆற விட்டு, ஆறிய பச்சை பயறோடு வெல்லம், ஏலக்காய் சேர்த்து உரல் அல்லது மிக்சில கரகரப்பா அரைச்சுக்கனும். (உரல்ல ஆட்டினா நல்லா இருக்கும். அரைச்ச மாவை சின்ன சின்ன உருண்டையா பிடிச்சு வச்சுக்கோங்க.

suyyam seimurai

ஒரு பாத்திரத்துல மைதாவை கொட்டி, அதுல தேவையான உப்பு சேர்த்துக்கோங்க. ஆப்ப சோடாவயும் போட்டு, தண்ணி கலந்து கட்டி இல்லாம கரைச்சுக்கனும். பஜ்ஜி மாவைவிட கொஞ்சம் கெட்டியா கறைச்சுக்கனும். அடுப்புல வாணலியை வச்சு தேவையான அளவு எண்ணெய் ஊத்தி காய வச்சு கரைச்சு வச்ச மாவுல பிடிச்ச வச்ச உருண்டையை அதுல போட்டு முக்கி எடுத்துக்கனும்.

உருண்டை ஃபுல்லா மாவு இருக்குற மாதிரி முக்கி எடுத்துக்கனும். கல்யாணம் ஆன புதுபொண்ணு மாதிரி  இதை கையாளனும். இல்லன்னா, மைதா மாவு கரைசலில் பயத்தம்பருப்பு உருண்டை கரைஞ்சிடும்.

ரெண்டு பக்கமும் பொன்னிறமாகும் வரை வேகவிட்டு எடுத்துக்கிட்டா சுய்யம் ரெடி.  மைதா மாவு தண்ணியா இருந்தா மாமியாரும், மருமகளும் ஒன்னு சேராத மாதிரி பிரிஞ்சி வந்திடும்.

Suyyam

மேல கொஞ்சம் மொறுமொறுப்பாவும் உப்பாவும் இருக்கும். அதைத்தாண்டி, இனிப்பு பூரணம் சேர்ந்து  சாப்பிட நல்லா இருக்கும். வெல்லமும், பச்சை பயறும் உடம்புக்கு நல்லது. அதனால் குழந்தைகளுக்குக்கூட கொடுக்கலாம்.

உள்ளே வெல்லம் இருப்பதால் சூடு ஆற கொஞ்சம் நேரம் பிடிக்கும். அதனால,பச்சை பயறை சூடா வெல்லம் சேர்த்து அரைச்சா இளக்கமா ஆகி உருண்டை பிடிக்க வராம போய்டும். அப்படி ஆயிட்டா , அரை மணி நேரம் ஃப்ரீசர்ல வெச்சு எடுத்தா உருண்டை பிடிக்க வரும்.

பச்சை பயறு உருண்டை ஃபுல்லா மாதா மாவு கலவை இருக்குற மாதிரி பார்த்துக்கோங்க. இல்லாட்டி உருண்டை உடைஞ்சு வெளில வந்து, மத்த போண்டா மேலலாம் கருப்பா மாறிடும். எண்ணெயும் பாழாகும். அங்க மட்டும் கொஞ்சம் கவனம் தேவை.

ரசனையோடு சமைப்போம். ரசித்து உண்போம்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top