சிம்மம் ராசி விளம்பி தமிழ் புத்தாண்டு பலன்கள் 2018!

Simmam vilambi Tamil puthandu rasi palan

சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த தமிழ்ப் புத்தாண்டில் சிரமங்கள் யாவும் படிப்படியாக விலகி சீராகும். உங்கள் ராசியில் இருந்து மூன்றாம் இடத்தில் குரு பகவான், ஐந்தாம் இடத்தில் சனி பகவான், ஆறாம் இடத்தில் கேது, பன்னிரெண்டாம் இடத்தில் ராகு பகவான் என்ற கிரக அமைப்புகள் இருக்கிறது. மேலும் குரு பெயர்ச்சி, ராகு-கேது பெயர்ச்சி நடைபெற இருக்கிறது.

இந்த ஆண்டு சிம்மம் ராசியினர் துணிவாக முடிவெடுப்பீர்கள். அதே சமயம் பேச்சுக்களில் கவனம் தேவை. பணிவோடு இருந்தால் வீண் விரோதம், மனக்கசப்பு ஏற்படாமல் இருக்கும். அடுத்தடுத்து வேலை சுமை இருந்து கொண்டே இருக்கும். திட்டமிட்டு செய்தால் நன்மைகள் உண்டாகும். குடும்பத்தில் இருந்த சுணக்கம் நீங்கி இணக்கம் உண்டாகும். இதுவரை இருந்து வந்த சங்கடங்கள் யாவும் நீங்கும். விட்டு கொடுத்து சென்றால் இல்லத்தில் இனிமையான சூழல் உண்டாகும்.

தடைபட்டுக் கொண்டு இருந்த விசேஷயங்கள் யாவும் ஒன்றன்பின் ஒன்றாக நடைபெறும். குடும்ப விஷயங்கள் பற்றி யாரிடமும் பகிர்ந்துக் கொள்ளாதீர்கள். மற்றவர்கள் உங்களை புறம் பேசினாலும் அதனை கண்டு கொள்ளாமல் இருந்தால் வீண் பிரச்சனைகளைத் தவிர்க்கலாம். தூரத்து உறவினர்கள் உங்களின் உதவியை நாடி வருவார்கள். ரத்தபந்த உறவுகளின் உடல்நலத்தில் அக்கறை எடுத்துக் கொள்ளுங்கள். அலட்சியம் காட்டாமல் மருத்துவரை அணுகுங்கள்.

வீணான வாக்குறுதிகளை யாருக்கும் கொடுக்காதீர்கள். உங்களால் இயன்றால் உதவி செய்யுங்கள் அல்லது முடியாது என்று தெளிவாக கூறிவிடுங்கள்.

சிம்ம ராசி பெண்களுக்கு அதிகளவில் நன்மைகள் நடைபெறும் ஆண்டாக இருக்கப் போகிறது. இந்த ஆண்டில் நிம்மதி என்றும் நிலைத்திட நிதானத்தைக் கடைபிடியுங்கள். பெரியவர்களின் வார்த்தைகளை, கருத்துக்களைக் காது கொடுத்துக் கேளுங்கள். மூன்றாம் நபரிடம் குடும்ப விஷேயங்கள் சொல்லிக் கொண்டிருக்காதீர்கள். ஆன்மீகப் பயணங்கள் ஏற்படக்கூடும். தொலைத்தூரம் பயணம் செய்யும் பொழுது ஆபரணங்களைத் தவிர்த்துவிடுங்கள். தடைபட்ட பிரார்த்தனைகள், குலதெய்வ வழிபாடு முழுமையாக செய்து முடிப்பீர்கள்.

அலுவலகத்தில் உங்களை உதாசீனப்படுத்தினவர்கள் உங்கள் திறமை அறிந்து பாராட்டுவார்கள் மற்றும் புதிய பொறுப்புகள் கொடுப்பார்கள். புதிய பதவி, சம்பள உயர்வு, எதிர்பார்த்த நிறுவனத்தில் வேலை அமையும். ஒரு சிலர் உங்களை பற்றி புறம் பேசி சூழ்ச்சியில் தள்ளுவார்கள். எதிலும் எச்சரிக்கை, நிதானத்துடன் செயல்படுங்கள்.

சிம்ம ராசியினருக்கு தொழில், வியாபாரம் சீராக இருக்கும். சோம்பலை தவிர்த்து முன்னேற்றத்திற்கான பாதைகளைத் தேர்வு செய்யுங்கள். அயல் நாட்டு வர்த்தகம், பங்குவர்த்தகத்தில் தகுந்த ஆலோசனையின்றி முதலீடு செய்யாதீர்கள்.

வியாபாரத்தில் அலட்சியம் காட்டாமல் நேரடி கவனம் செலுத்துங்கள். வெளியூர் சென்று பணிபுரியும் அமைப்பு இருக்கிறது. முன்கோபத்தை தவிர்த்திடுங்கள்.  பணிபுரியும் இடத்தில் சக ஊழியர்களிடம் அனாவசிய வார்த்தைகளை பேச வேண்டாம். திறமைகள் பளிச்சிடும் என்பதால் சிறிய வாய்ப்புகள் கிடைத்தாலும் அதனை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

சிம்ம ராசியினருக்கு வயிறு, பற்கள், தொண்டை, உணவு குழாய் சம்பந்தமான பிரச்சனைகள் அவ்வப்பொழுது வரக்கூடும்.

சிம்மம் ராசி மாணவ மாணவிகள் சோம்பலை அகற்றி, படிப்பில் அக்கறையுடன் படித்தால் தேர்வில் எதிர்பார்த்த அளவிற்கு மதிப்பெண் பெறலாம். வீண் அரட்டை, நவீன சாதனங்களில் பொழுதை வீணாக்காமல் பகுதி நேரத்தை பயனுள்ளதாக அமைத்து கொள்ளுங்கள்.

பரிகாரம்:

சிம்மம் ராசி மகம் நட்சத்திரம் அதிபதி கேது பகவான் என்பதால் பிள்ளையார் வழிபாடு செய்தால் அதிகளவில் நன்மை உண்டாகும். சதுர்த்தி அல்லது சனிக்கிழமை பிள்ளையாருக்கு அறுகம்புல் சாற்றி வழிபட்டு வந்தால் ஆண்டு முழுவதும் ஆனந்தம் என்றும் நிலைத்திடும்.