சாத்தான்குளம் சாத்தான்கள் தண்டிக்கப்பட வேண்டும்: விஜய் தந்தை ஆவேசம்

சாத்தான்குளத்தில் நடந்த கொடூரத்தை நிகழ்த்திய சாத்தான்கள் தண்டிக்கப்பட வேண்டும் என இயக்குனரும் விஜய்யின் தந்தையுமான் எஸ்ஏ சந்திரசேகர் வீடியோ ஒன்றில் ஆவேசமாக கூறியுள்ளார்.

சாத்தான்குளத்தில் செல்போன் கடை வியாபாரிகளான ஜெயராஜ் மற்றும் அவருடைய மகன் பென்னிக்ஸ் ஆகிய இருவரும் காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் மர்மமான முறையில் மரணம் அடைந்தனர்

இந்த சம்பவம் குறித்து மதுரை ஐகோர்ட் கிளை அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில் திரையுலகை சேர்ந்த பிரமுகர்கள் பலர் இந்த சம்பவத்திற்கு தங்களுடைய எதிர்ப்பை பதிவு செய்தனர்

இந்த நிலையில் சற்று முன்னர் தளபதி விஜய்யின் தந்தை எஸ்ஏ சந்திரசேகர் அவர்கள் இதுகுறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது:

கொரோனா என்ற கொடிய வைரஸிடமிருந்து கூட உயிரோடு தப்பித்து திரும்பி விடலாம். ஆனால் சாத்தான்குளம் போலீஸ் அதிகாரிகளிடம் சிக்கினால் கண்டிப்பாக உயிரோடு திரும்ப முடியாது, இந்த கொரோனா காலத்தில் எத்தனை போலீஸ் அதிகாரிகள் கடவுளுடைய பிரதிநிதிகளாக கருதப்படுகிறார்கள். அதை மறக்கவும் முடியாது, மறுக்கவும் முடியாது. அப்படிப்பட்ட போலீஸ் துறையில் இதுபோன்ற சாத்தான்களா? இவர்கள் உடனடியாக தண்டிக்கப்பட வேண்டும். இந்த சாத்தான்களை காப்பாற்ற நினைக்கும் யாரையும் மக்கள் மன்னிக்க மாட்டார்கள் என்று எஸ்.ஏ.சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.