ராவணனுக்கும் அருளியவன் – தேவாரப்பாடலும், விளக்கமும் – 17

பாடல்

வருக்க மார்தரு வான்கடு வன்னொடு மந்திகள்
தருக்கொள் சோலை தருங்கனி மாந்திய பூந்தராய்த்
துரக்கு மால்விடை மேல்வரு வீர்அடி கேள்சொலீர்
அரக்கன் ஆற்றல் அழித்தருளாக்கிய ஆக்கமே

விளக்கம்

இனங்களோடு கூடிய ஆண் குரங்குகள், பெண் குரங்குகளோடு கூடி, மரங்கள் நிறைந்துள்ள சோலைகள் தரும் கனிகளை வயிறார உண்டு மகிழும் பூந்தராய் என்னும் சீகாழிப்பதியில் எழுந்தருளியிருந்து, செலுத்தத்தக்க மாலாகிய இடபத்தின் மேல் காட்சிதரும் அடிகளே! இராவணனின் தருக்கினை அழித்து உடன் அவனுக்கு அருள் வழங்கிய ஆக்கத்திற்குக் காரணம் யாதோ? சொல்வீராக.