ரஜினியின் வெளியாகாத படம் ஜில்லா கலெக்டர்!

இயக்குனர் ஆர். வி உதயக்குமார் உரிமை கீதம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர். 90களில் பிஸியான இயக்குநரான இவர், உறுதிமொழி, கிழக்கு வாசல் என பல படங்களை இயக்கினார். இதில் கிழக்கு வாசல் நல்லதொரு பெயரை வாங்கி கொடுத்தது உதயக்குமாருக்கு.

de3f52e197d74841003ec19e668b655c-1

இருப்பினும் மிகப்பெரிய வெற்றிக்காக போராடிய ஆர்.வி உதயகுமாருக்கு 91ல் வெளியான சின்னக்கவுண்டர் படம் நல்லதொரு அங்கீகாரத்தையும் அவரது சினிமா வாழ்வில் திருப்பு முனையையும் ஏற்படுத்தியது.

சினிமா உலகில் திடீர் வெற்றி பெறும் இயக்குனர்கள், திறமையான இயக்குனர்களை அன்றில் இருந்து இன்று வரை ரஜினி கைவிட்டதில்லை. அந்தந்த நேரத்தில் வளர்ந்து வரும் திறமையான இயக்குனர்கள் படங்களில் ரஜினி நடித்து விடுவார். அப்படியாக சின்னக்கவுண்டர் ஹிட் மூடில் இருந்த ஆர்.வி உதயக்குமார், ரஜினி தன்னிடம் கதை கேட்டார் என்பதற்காக சொன்ன படம் தான் ஜில்லா கலெக்டர். கலெக்டர் சம்பந்தமான கதை. நகரத்து லுக்கில் ஸ்டைலாக ரஜினியின் லுக் அப்போதைய வாரப்பத்திரிக்கைகளில் வந்தது.

எந்த மாதிரி கதையை எடுக்கலாம் என்று ரஜினியும், உதயகுமாரும் ஆலோசித்தபோது, “உங்கள் படத்தை நான் இயக்கவேண்டும் என்று நினைக்கிறீர்களா? அல்லது என் படத்தில் நீங்கள் நடிக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களா?” என்று உதயகுமார் கேட்டாராம்.

“இரண்டும் ஒன்றுதானே” என்றாராம் ரஜினி.

“இல்லை” என்றாராம், உதயகுமார்.

“எப்படி?” என்று கேட்டாராம், ரஜினி.

“ரஜினி படம் என்பது பார்முலா படம். அதை யாரும் இயக்கலாம். ஆனால், உதயகுமார் பாணி படம் என்றால், நான்தான் இயக்க முடியும்” என்று கூறி இருக்கிறார் உதயகுமார்.

அதற்கு ரஜினிகாந்த் சிரித்துக்கொண்டே, “ரஜினி ஸ்டைல் கதையையே பண்ணுங்கள்” என்றார்.

“ஜில்லா கலெக்டர்” என்ற கதையை கூறி இருக்கிறார் உதயகுமார். “சரி, எடுக்கலாம்” என்று ரஜினி சொல்லி இருக்கிறார்

பிறகு படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன், உதயகுமாரை ரஜினி அழைத்து. “என் ஸ்டைலில் வேண்டாம்; உங்கள் ஸ்டைலிலேயே படத்தை எடுங்கள்” என்றார்.

ஏற்கனவே, “பொன்னுமணி” என்ற கதையை ரஜினிக்கு உதயகுமார் சொல்லியிருந்தார். “அதை எடுக்கலாமே” என்று ரஜினி கூற, “அந்தக் கதையை கார்த்திக்கிடம் சொல்லி, அவரை வைத்து எடுப்பதாக வாக்கு கொடுத்துவிட்டேன்” என்றார், உதயகுமார்.

அதன் பிறகுதான், “எஜமான்” கதை முடிவானது. இந்தப் படத்தில் முற்றிலும் மாறுபட்ட தோற்றத்தில், வேட்டி-சட்டையில் நடித்தார், ரஜினி.

ஜில்லா கலெக்டர் படத்தில் நடிக்க வேண்டிய ரஜினி அதே கால்ஷீட்களில் எஜமான் படத்தில் நடித்து கொடுத்திருக்கிறார்.

கடைசியில் ஸ்டைலாக அனைவரும் எதிர்பார்த்த ஜில்லா கலெக்டர் படம் ட்ராப் ஆனதுதான் மிச்சம். கடைசி வரை அந்த படத்தை உதயக்குமார் வேறு எந்த நடிகரையும் வைத்து இயக்கவில்லை.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews