ராகுலின் அதிரடி பேச்சு

பிரதமர் யார் என்பதை மக்கள் தான் முடிவு செய்வார்கள் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கூறியுள்ளார். பிரதமர் யார் என்பதை மக்களிடம் திணிப்பது அடாவடி அரசியல் என அவர் விமர்சித்துள்ளார். 

சென்னை கிண்டியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ராகுல் காந்தி, சமூக நல்லிணக்கமே காங்கிரஸ் கட்சியின் முக்கிய நோக்கமாக உள்ளது என்றார். அதிக வேலை வாய்ப்பு தரக்கூடிய சிறு, நடுத்தர தொழில்கள் இப்போது பாதிக்கப்பட்டுள்ளன என்ற அவர், சிறு, நடுத்தர தொழில்துறையை முன்னேற்றுவதன் மூலம் வேலைவாய்ப்பை அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக கூறினார். ஆட்சிக்கு வந்தால் உற்பத்தி மாநிலமான தமிழகத்தில் வேலை வாய்ப்பை உருவாக்க முயற்சிப்போம் என்று அவர் குறிப்பிட்டார். 

நாட்டின் பிரதமர் யார் என்பதை மக்கள்தான் முடிவு செய்வார்கள் என்ற ராகுல், பிரதமர் யார் என்பதை மக்களிடம் திணிப்பதை அடாவடி செயலாக காங்கிரஸ் கருதுகிறது என்றார். 
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேர் மீதும் தனிப்பட்ட முறையில் கோபம் எதுவும் இல்லை என்ற அவர், 7 பேர் விடுதலை குறித்து நீதிமன்றம் தான் முடிவு செய்ய வேண்டும் என்றார். காவிரி விவகாரம் இரு மாநில அரசுகளும் பேசி தீர்க்க வேண்டிய பிரச்சனை என்று அவர் குறிப்பிட்டார். 

ரபேல் ஒப்பந்தம் குறித்து பாதுகாப்புத்துறை பேச்சுவார்த்தை நடத்தும்போது, பிரதமர் அலுவலகமும் பேசியது தவறு என்ற அவர், ரபேல் விவகாரத்தில் விசாரணை நடந்தால் அனில் அம்பானியும், பிரதமரும் குற்றவாளிகள் ஆவார்கள் என்றார். ரபேல் விவகாரத்தில் விமானத்தின் தரம், செயல்பாடு பற்றி காங்கிரஸ் கேள்வி எழுப்பவில்லை என்றார். 

நீட்தேர்வால் தமிழகம் பாதிக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டிய அவர், நீட் விவகாரத்தில் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து, மோடி, பாஜக, ஆர்.எஸ்.எஸ். ஐயும் எதிர்ப்பதாக கூறிய அவர், நாக்பூரில் இருந்து நாட்டை ஆட்சி செய்ய நினைத்தால் இனி முடியாது என்றார். 

ஒவ்வொரு முறையும் செய்தியாளர்களை சந்திப்பதை சுட்டிக்காட்டிய ராகுல் ஆனால், பிரதமர் மோடி சந்திக்கிறாரா? என்று கேள்வி எழுப்பினார்.


தமிழகம் தற்போது பிரதமர் மோடியால் இயக்கப்பட்டு வருவதாக கூறிய ராகுல், காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் தமிழ் மொழி மற்றும் கலாச்சாரம் மீது தாக்குதல் நடக்காமல் பார்த்துக்கொள்வோம் என்றார்.