Connect with us

2019 புத்தாண்டு ராசி பலன்!

பொழுதுபோக்கு

2019 புத்தாண்டு ராசி பலன்!

இந்த விளம்பி வருடத்தில் மாழ்கழி மாதம் 17-ம் தேதி அதாவது 1/1/2019 கிருஷ்ணபக்ஷ  தசமியும் ஸ்வாதி நட்சத்திரமும், பத்ரை கரணமும் அமிர்த யோகமும் கூடிய சுபதினத்தில் முன் இரவு 12.00 மணிக்கு கன்னியா லக்கினத்தில் இந்த புத்தாண்டு பிறக்கின்றது. துலாம் ராசி ஸ்வாதி நட்சத்திரம், கன்னி லக்கினத்தில் இந்த புத்தாண்டு பிறக்கின்றது. இந்த புத்தாண்டு காலத்தில் ராகு-கேது மார்ச் 6-ம் தேதி பெயர்ச்சி ஆகின்றது. கடகம் ராசியில் இருக்கும் ராகு மிதுனம் ராசிக்கு மாறுகிறார், மகரம் ராசியில் இருக்கும் கேது தனுசு ராசிக்கு மாறுகிறார். குரு பகவான் நவம்பர் 23-ம் தேதிக்குப் பிறகு விருச்சகம் ராசியில் இருந்து தனுசு ராசிக்கு பெயர்ச்சி ஆகின்றார்.

மேஷம் 2019 ராசி பலன்:

2019 mesham new year rasi palan
2019 mesha rasi palangal

இந்த ஆண்டின் கிரக நிலைகளை ஆராயும் பொழுது மேஷம் ராசியினருக்கு படிப்படியான முன்னேற்றம் ஏற்படும் ஆண்டாக இருக்கப் போகின்றது. ஆண்டின் தொடக்கத்தில் செலவு அதிகரித்தாலும், ராகு-கேது பெயர்ச்சிக்குப் பிறகு உங்களது பொருளாதரம் சிறப்பாக இருக்கக்கூடும். நீண்ட நாட்களாக நிறைவேறாத திட்டங்கள், ஆசைகள் இப்பொழுது நிறைவேறும். உங்களது கனவுகள் நனவாகும் ஆண்டாக இருக்கப் போகின்றது. குரு சாதகமற்று எட்டாம் இடத்தில் இருந்தாலும், அவரது விசேஷ பார்வையால் பல வித நன்மைகள் உண்டாகும். மார்ச் மாதம் இறுதியில் குரு பகவான் அதிசாரம் பெற்று தனுசு ராசியில் சஞ்சரிப்பார். குரு ஒன்பதாம் இடத்தில் வருகின்ற பொழுது 1,3,5-ம் இடங்களை பார்ப்பதால் திடீர் திருப்புமுனைகள் உண்டாகும்.

பொது பலன்:

அனைத்து மேஷம் ராசியினருக்கு பொருளாதாரம் சிறப்பாக இருக்கக்கூடும். பணத்தட்டுப்பாடு இல்லாத நிலை உருவாகும். வாங்கிய கடனை திரும்ப செலுத்தும் அளவிற்கு எவ்வழியிலாவது பணவரவு வரக்கூடும். சிலருக்கு பயணம் தொடர்பான விஷயங்களில் வருமானம் வரக்கூடும். குறிப்பாக ரியல் எஸ்டேட், மார்க்கெட்டிங் துறையில் இருக்கின்றவர்களுக்கு உபரி வருமானம் வரக்கூடிய ஆண்டாக இருக்கப் போகின்றது. இல்லத்தில் இருப்பவர்களுடன்  புனித யாத்திரைக்கு சென்று வருவீர்கள். ஆன்மீக விஷயங்களில் அதிகம் ஈடுபாடு உண்டாகும். நீண்ட நாட்களாக குலதெய்வ வழிபாட்டை மேற்கொள்ளாதவர்கள் உடனடியாக குலதெய்வ வழிபாட்டை மேற்கொள்ளுங்கள். சித்தர்களின் வாக்குப்படி நீங்கள் எவ்வளவு தான் இஷ்ட தெய்வத்தை வணங்கினாலும், உங்களது குலதெய்வத்திற்கு மிஞ்சிய சக்தி எதுவும் இல்லை.

உங்களது பிள்ளைகள் வழியில் இருந்துவந்த மனக்கசப்பு நீங்கி, அவர்களால் மகிழ்ச்சியான சூழல் உருவாகும். உங்கள் மகளுக்கு அல்லது மகனுக்கு திருமணம் தள்ளி போகிக்கொண்டே இருக்கின்றதே என்று இருந்தவர்களுக்கு, நல்ல வரன் அமையக்கூடும். மார்ச் மாதத்திற்குப் பிறகு இல்லத்தில் மங்கள நிகழ்வுகள் நடைபெறக்கூடும். பூர்விக சொத்து விஷயத்தில் இருந்துவந்த தடைகள், சட்டசிக்கல்கள் விலகி ஒரு நல்ல முடிவுக்கு வரக்கூடும்.

உத்யோகஸ்தர்களுக்கு:

ஆண்டின் தொடக்கத்தில் உங்களுக்கு வேலைசுமை அதிகரிக்கும். சற்று அலைச்சலுடன் வேலை முடிக்க வேண்டிய சூழல் உருவாகும். மார்ச் 6-ம் தேதிக்குப் பிறகு உங்கள் உழைப்பிற்கு தகுந்த பலன் கிடைக்காமல் போகாது. பணிபுரிகின்ற இடங்களில் நிம்மதியான சூழல் உருவாகும். மேலதிகாரிகளின் ஆதரவு கிட்டும். சக ஊழியர்களிடம் நல்ல ஒத்துழைப்பு கிடைக்கும். விரும்பிய இடத்திற்கு இடமாற்றம் கிடைக்கும். அரசு ஊழியர்களுக்கு அலைச்சல் இருக்கக்கூடும். வேலையின்றி இருப்பவர்களுக்கு அதிகம் முயற்சி செய்தால் தகுந்த வேலை கிடைக்கும்.

வியாபாரம்/தொழிற்பிரிவினர்:

மார்ச் மாதம் 6-ம் தேதிக்குப் பிறகு உங்களது தொழிலில், வியாபாரத்தில் இருந்த போட்டிகள், எதிர்ப்புகள், தடைகள் விலகி அனைத்தும் உங்களுக்கு நல்ல விதமாக நடைபெறக்கூடும். பெண்களை பங்குதாரர்களாக கொண்ட நிறுவனங்கள் நல்ல லாபத்தை அடையும். செய்கின்ற தொழிலை விரிவாக்கம் செய்ய முடியாமல் திணறிக் கொண்டு இருந்தவர்களுக்கு முதலீடு செய்வதற்கான பணம் கிடைக்கும்.

பெண்களுக்கு:

மேஷம் ராசி பெண்கள் இல்லத்தில் இருப்பவர்களுடன் விட்டு கொடுத்து செல்லுங்கள். ஆடை, அணிகலன்கள் வாங்கி மகிழ்வீர்கள். திருமணம் ஆகாத பெண்களுக்கு நல்ல வரன் அமையக்கூடும். பணிபுரியும் பெண்களுக்கு நல்ல வாய்ப்புகள் வரக்கூடும்.வேலை தேடிக் கொண்டு இருப்பவர்களுக்கு நல்ல நிறுவனத்தில் இருந்து அழைப்பு வரக்கூடும். இல்லத்தில் இருப்பவர்கள் உங்களது கருத்துகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள். சமூகத்தில் உங்களது அந்தஸ்து, பெயர், புகழ் உயரும்.

உடல் நிலை:

இதுவரை உங்களது மனதில் தோன்றிய எதிர்மறை எண்ணங்கள், தாழ்வு மனப்பான்மை இனிமேல் இருக்காது. மனம் தெளிவு பிறக்கும். அதிசார குரு உங்களது ராசியைப் பார்ப்பதால் உடல்நிலையும், மனநிலையும் தெளிவாக  உற்ச்சாகத்துடன் காணப்படுவீர்கள். கடந்த காலங்களில் நோய்வாய்ப்பட்டு இருந்தவர்கள் நல்ல முன்னேற்றம் காண்பார்கள். மருத்துவ செலவுகள் குறையும்.

மாணவமாணவியர்களுக்கு:

மேஷம் ராசி மாணவர்கள் ஆண்டின் தொடக்கத்தில் படிப்பில் மந்தமாக காணப்படுவார்கள். நவீன கருவிகளை அதிகம் பயன்படுத்துவதால் படிப்பில் கவனத்தை சிதறவிடுவார்கள். மார்ச் 13-ம் தேதிக்குப் பிறகு மந்த நிலை மாறி சுறுசுறுப்புடன் செயல்பட தொடங்குவார்கள். உயர்கல்வி கற்பதற்கு வெளிநாட்டில் முயற்சி செய்கின்றவர்களுக்கு நல்லபடியாக அமையக்கூடும்.

பரிகாரம்:

அருகில் இருக்கும் கோயிலுக்கு சென்று முருகனை செவ்வாய்க்கிழமை அல்லது வியாழக்கிழமை வழிபட்டு வாருங்கள். சனியும் கேதுவும் சாதகமற்ற நிலையில் இருப்பதால் பிள்ளையாரை வழிபாடு செய்யுங்கள்.

ரிஷபம் 2019 ராசி பலன்:

2019 rishabam new year rasi palan
2019 rishaba rasi palangal

பொது பலன்கள்:

ரிஷபம் ராசியினருக்கு எந்த ஒரு விஷயத்தை தொடங்கினாலும் நீண்ட  முயற்சிக்கு பிறகே வெற்றியை கொடுக்கும். குரு பகவான் உங்கள் ராசியில் ஏழாம் இடத்தில் இருந்து கொண்டு உங்களது ராசியை பார்ப்பதால் உங்களுக்கு ஏற்படுகின்ற துன்பங்களை எதிர்கொள்ள அபார ஆற்றலைக் கொடுப்பார்.

எட்டாம் இடத்தில் சனி பகவான் ஆண்டு முழுவதும் தொடர்வதால் உறவினர்கள் இடையே வீண் பகையும், மனக்கசப்பும் ஏற்படுத்தி இருப்பார். வேலை, தொழில் போன்றவற்றில் முன்னேற்றம் இல்லாத நிலை இருக்கக்கூடும். இளைய பருவத்தினர், நடுத்தர வயதுக்காரர்களுக்கு ஜீவன அமைப்புகளில் நெருக்கடிகளும், பணம் விரயமும் ஏற்படுகின்ற நிலை இருக்கக்கூடும். சிலருக்கு பொருளாதார சிக்கலையும், பணத் தட்டுப்பாட்டினையும், கடன் வாங்க வேண்டிய அளவிற்கு நிலைமையை உருவாக்குவார். சுயஜாதகத்தில் நல்ல தசாபுத்திகள் மற்ற கிரகங்கள் வலுவாக, சுப பார்வை, சேர்க்கை பெற்று இருந்தால் எவ்வித பாதிப்புகளும் உண்டாகாது.

புதிய தொழில், வியாபாரம் தொடங்க ஏற்ற நேரமாக இல்லை. எதிலும் அகலக்கால் வைக்காமல் பொறுமையுடனும், கவனத்துடனும் செயல்படக்கூடிய வருடமாக இருக்கின்றது. உங்கள் ராசிக்கு ராஜயோகாதிபதியான சனி பகவான் என்பதால் எவ்வித கேடு பலன்களையும் கொடுக்க மாட்டார். ஆயினும் பணத்தின் அருமையை உணர வைப்பார். சிலருக்கு வெளிநாட்டில் வேலை வாய்ப்பு வரக்கூடும். நவம்பர் மாதத்திற்கு பிறகு நல்ல பணவரவு வரக்கூடும்.

உத்யோகஸ்தர்களுக்கு:

ஆண்டின் தொடக்கத்தில் பணியிடத்தில் பணிச்சுமை அதிகரிப்பதால் அதிகம் உழைக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். அரசு துறையில் பணிபுரிகின்றவர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும். பணியிடத்தில் மறைமுக எதிர்ப்புகள் இருக்கக்கூடும். மார்ச் 13-ம் தேதிக்குப் பிறகு பணியிடத்தில் சாதகமான பலன்களை அடைவீர்கள். விரும்பிய இடத்திற்கு இடமாற்றம் உண்டாகும். சிலருக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும். வேலையின்றி இருப்பவர்கள் அதிகம் முயற்சி எடுத்தால் வேலை வாய்ப்பு கிடைக்கும்.

வியாபாரம்/தொழிற்பிரிவினர்:

பெரும்பாலான ரிஷப ராசியினர்கள் தொழிலில், வியாபாரத்தில்  நெருக்கடியான சூழ்நிலை சந்தித்து வந்தீர்கள். அஷ்டம சனியின் ஆதிக்கத்தினால் பல வித இழப்புகள், வியாபாரத்தில் மந்தமான சூழ்நிலை ஏற்பட்டு இருக்கும். மார்ச் 13-ம் தேதிக்குப் பிறகு வியாபாரம், தொழிலில் ஏற்பட்ட மந்தமான நிலை மாறி சூடு பிடிக்க தொடங்கும். பெண்களை பங்குதார்களாக கொண்ட நிறுவனங்கள் தழைத்து ஓங்கும். வேலையின்றி இருப்பவர்களுக்கு மார்ச் மாதத்திற்குப் பிறகு குறைந்த முதலீட்டில் புதிய வியாபாரத்தை தொடங்கலாம். வீண் விரயம் ஏற்பட வாய்ப்பு இருப்பதால் சிக்கனம் தேவை.

பெண்களுக்கு:

இந்த ஆண்டு ரிஷபம் ராசி பெண்களுக்கு அதிகமான நற்பலன்கள் உண்டாகும். இல்லத்தில் செலவுகள் அடுத்தடுத்து இருந்து கொண்டு இருக்கக்கூடும் என்பதால் அனாவசிய செலவுகளை குறைத்துக் கொள்ளுங்கள். ஆடம்பர செலவுகளைத் தவிர்த்திடுங்கள். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். பெரியவர்களின் ஆசியும், ஆலோசனையும் கிடைக்கும். இல்லத்தில் இருப்பவர்களுடன் விட்டுக் கொடுத்து செல்லுங்கள். உறவினர்கள் இடையே வீண் வாக்குவாதங்களை தவிர்த்திடுங்கள். அஷ்டமத்தில் சனி தொடர்வதால் அக்கம் பக்கத்தினர் இடையே வீண் விரோதத்தை உருவாக்குவார். குடும்ப தேவைகள் பூர்த்தியாகும். உற்றார், உறவினர்களின் விருந்து, விழாக்களில்  கலந்து கொள்வீர்கள்.

உடல் நிலை:

உடல்நல விஷயத்தில் அலட்சியம் காட்டாமல் சிறு பிரச்சனை என்றாலும் மருத்துவரை அணுகவும். சிலர்  மன உளைச்சலுடன் காணப்படுவார்கள். மார்ச் 13-ம் தேதிக்குப் பிறகு, மனம் தெளிவு அடையும்.

மாணவமாணவியர்களுக்கு:

மாணவர்கள் சிரத்தை எடுத்து படிக்க வேண்டும். வேண்டாத நண்பர்களின் சேர்க்கையால் படிப்பில் கவனம் சிதறும். மார்ச் 13-ம் தேதிக்குப் பிறகு படிப்பில் இருந்த தேக்க நிலை மாறும். குருவின் பார்வையால் ஆசிரியர்களின் அறிவுரை கிடைக்கும்.

பரிகாரம்:

உறவினர்களிடம் ஏற்பட்ட சுணக்கம் நீங்கி இணக்கம் உண்டாக வியாழக்கிழமை தட்சிணாமூர்த்தியை வழிபட்டு வாருங்கள். மேலும் எடுக்கின்ற முயற்சிகளில் தடைகள் அகல சனிக்கிழமை சனீஈஸ்வரனுக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபட்டு வாருங்கள்.

மிதுனம் 2019 ராசி பலன்:

2019 mithunam new year rasi palan
2019 mithuna rasi palangal

பொது பலன்கள்:

மிதுனம் ராசியினருக்கு இந்த புத்தாண்டு எண்ணிய காரியங்கள் யாவும் நிறைவேறும் ஆண்டாக இருக்கப் போகின்றது. கடந்த காலங்களில் நடந்த சம்பவங்களை பாடமாக கொண்டு புதிய வெற்றி பாதையை நோக்கி செல்வீர்கள். இதுவரை திருமண வயதை அடைந்தவர்களுக்கு சரியான வரன் அமையாமல் இருந்தவர்களுக்கு நல்ல வரன் அமையக்கூடும். புத்திர பாக்கியம் உண்டாகும். எதிரிகள் தொல்லைகள் அகலும். உங்களது சாதுர்யமான பேச்சால் பல வித சிக்கல்களில் இருந்து விடுபடுவீர்கள். தந்தை வழி சொத்துகளில் இருந்து வந்த பிரச்சனைகள் அகலும்.

குரு பகவான் ஆறாம் இடத்தில் சாதகமற்ற நிலையில் இருந்தாலும், அவரது ஒன்பதாம் பார்வை சிறப்பாக இருப்பதால் எவ்வித பாதிப்புகளும் உண்டாகாது. குரு அதிசாரம் பெற்று ஏழாம் இடத்திற்கு வரும் பொழுது மாற்றங்களும், புதிய வாய்ப்புகளும் கிடைக்கும். தற்பொழுது ராகு பகவான் உங்கள் ராசிக்கு இரண்டாம் இடத்தில் இருக்கின்றார். மார்ச் 6-ம் தேதி ராகு உங்கள் ராசியில் அமர்கின்றார். வெளிநாடு அல்லது வெளிமாநிலம் செல்ல நல்ல வாய்ப்புகள் வரக்கூடும். தாராளமான பணவரவு பல்வேறு வழியில் கிடைக்கும் என்பதால் வீண் விரயத்தை செய்யாமல், ஏதேனும் சேமிப்பு திட்டத்தில் சேர்த்து வைப்பது புத்திசாலித்தனமாகும்.

உங்கள் மீதான அவப்பெயர் மறைந்து, நற்பெயர் உண்டாகும். யாரிடமும் வீண் வாக்குவாதங்களில் ஈடுபடாதீர்கள். முக்கியமான முடிவுகளை வீட்டின் பெரியவர்களை வைத்து ஆலோசனை செய்து முடிவு செய்யுங்கள்.பிள்ளைகள் சம்மந்தமாக எடுக்கின்ற முயற்சிகள் நல்ல விதமாக முடிவடையும். மார்ச் 13-ம் தேதி முதல் மே 19-ம் தேதி வரை பிள்ளைகளால் பெருமையான சம்பவங்கள் நிகழக்கூடும். உடன்பிறந்தவர்கள் உங்களுக்கு பக்க பலமாக இருப்பார்கள். குரு 12-ம் இடத்தைப் பார்ப்பதால் சுப விரயங்கள் உண்டாகும். இந்த புத்தாண்டு வீடு கட்டுவது, திருமணம், குழந்தைகளுக்கான சுபச்செலவுகள் தரக்கூடிய ஆண்டாக இருக்கின்றது.

உத்யோகஸ்தர்களுக்கு:

தனியார் துறையில் பணிபுரிகின்றவர்கள் பணிவாக நடந்து கொள்ள வேண்டும். முன்கோபத்தை தவிர்த்திடுங்கள். பணியிடத்தில் மற்றவர்களை பற்றி வீண் அரட்டை தவிர்த்திடுங்கள். அதுவே மற்றவர்களின் மனஸ்தாபங்களுக்கோ, வீண் விரோதத்திற்கோ வழிவகுக்கும். இளைய பருவத்தினருக்கு நிரந்தரமான வேலை அமையாமல் இருந்தவர்களுக்கு நல்ல நிறுவனத்தில் இருந்து அழைப்பு வரக்கூடும். முப்பது வயதுகளில் இருப்பவர்களுக்கு ஜீவனஸ்தானம் வலுப்பெறுவதால் சுறுசுறுப்புடன் செயல்பட தொடங்குவார்கள். பத்திரிகை, கலைத்துறை, ஊடகத்துறையில் இருப்பவர்களுக்கு அலைச்சலும், வேலைப்பளுவும் இருக்கக்கூடும்.

சாப்ட்வேர் துறையில் பணிபுரிகின்றவர்கள் நல்ல வளர்ச்சியை அடைவீர்கள். அரசு ஊழியர்களுக்கு மேலதிகாரிகளிடம் இருந்து வந்த நெருக்கடி, மனஉளைச்சல் சூழ்நிலை மாறக்கூடும். இடைக்கால பணிநீக்கம் செய்யப்பட்டவர்களுக்கு மீண்டும் நிறுவனத்தில் சேர சொல்லி அழைப்பு வரக்கூடும்.

வியாபாரம்/தொழிற்பிரிவினர்:

வியாபாரத்தில் எதை தொட்டாலும் வளர்ச்சியை விட சறுக்கலே அதிகமாக சந்தித்து வந்தீர்களே, இனி இந்த நிலை மாறும். தானிய வியாபாரம், காய்கறி வியாபாரம், பாத்திரம், பூஜை சாமான் பொருட்கள் வியாபாரம் செய்கின்றவர்கள் நல்ல வளர்ச்சி காண்பார்கள். வியாபாரம், தொழில் விஷயமாக அடிக்கடி பயணங்கள் மேற்கொள்ள வேண்டி வரக்கூடும். முக்கியமான பொறுப்புகளை மற்றவர்களிடம் ஒப்படைக்காதீர்கள். அவ்வாறு கொடுக்க நேர்ந்தால் உங்கள் மேற்பார்வையில் வைத்து கொள்வது நல்லது. புதியதாக வியாபாரம் செய்வதற்கு அகலக்கால் வைக்க வேண்டாம்.

பெண்களுக்கு:

சனி பகவான் ஏழாம் இடத்தில் இருந்து கொண்டு ஏழாம் பார்வையாக  உங்கள் ராசியை பார்ப்பதால் கணவன் மனைவி இடையே விட்டுக் கொடுத்து செல்லுங்கள். உறவுகளிடம் வீண் விரோதத்தை ஏற்படுத்துவார் என்பதால் அனுசரித்து செல்லுங்கள். நீண்ட நாட்களாக போக முடியாத புனிதஸ்தலங்களுக்கு இல்லத்தில் இருப்பவர்களுடன் சென்று வருவீர்கள். நவம்பர், டிசம்பர் மாதங்களில் தடைபட்டுக் கொண்டு இருந்த சுபவேஷங்கள் நல்ல படியாக முடிவடையும். ஆடம்பர பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். புத்தாடை, அணிகலன்கள் சேர்க்கை உண்டாகும்.

உடல் நிலை:

தட்ப வெப்ப மாறுதலால் தோல் சம்மந்தமான பிரச்சனைகள் உண்டாகலாம்.உடல் நலனில் அக்கறை எடுத்துக் கொள்ளுங்கள். மே மாதம் 19-ம் தேதிக்குப் பிறகு சிலருக்கு பித்தம், மயக்கம் தோன்றி மறையக்கூடும்.

மாணவமாணவியர்களுக்கு:

மிதுனம் ராசி மாணவ – மாணவியர்களுக்கு இந்த ஆண்டு சுமாராகதான்  இருக்கும். பிள்ளைகளின் கவனம் திசை மாறி படிப்பில் நாட்டம் இல்லாமல் போகும் என்பதால் பெற்றவர்கள் அவர்களை கண்காணிப்பது நல்லது. குருவின் பார்வையால் வெற்றி கிடைக்கும். மேற்படிப்பிற்காக வெளிநாட்டிற்கு சென்று பயில விரும்பும் மாணவர்களுக்கு விரும்பிய இடத்தில் சீட் கிடைக்கும்.

பரிகாரம்:

சனிக்கிழமை தோறும் அருகில் இருக்கும் பெருமாள் ஆலயத்திற்கு சென்று வாருங்கள்.

கடகம் 2019 ராசி பலன்:

2019 kadagam new year rasi palan
2019 kadaga rasi palangal

பொது பலன்கள்:

கடகம் ராசியினர்களுக்கு இந்த 2019ம் வருடம் அதிக அளவில் நன்மை நடைபெறப் போகின்றது. கோட்சர ரீதியாக கிரகங்கள் சாதகமாக இருப்பதால் துணித்து செயல்படுங்கள். குரு பகவான் 5-ம் இடத்தில் இருந்து கொண்டு உங்களது ராசியை ஒன்பதாம் பார்வையாக பார்ப்பதால் இது ஒரு பொற்காலம் என்றே கூறலாம். புதிய வாய்ப்புகள் வரக்கூடும். சரியான வேலை அமையாமல் இருந்தவர்களுக்கு மார்ச் மாதம் 6-ம் தேதிக்குப் பிறகு  நல்ல நிறுவனத்தில் இருந்து அழைப்பு வரக்கூடும்.

பொதுவாக பாவ கிரகங்கள் 3, 6, 11-ம் இடங்களில் இருக்கின்ற பொழுது நன்மையே செய்வார்கள். உங்கள் ராசிக்கு ஆறாம் இடத்தில் சனி பகவான் இருப்பதால் உங்களுக்கு பல வித நற்பலன்களை வழங்கி கொண்டு இருக்கின்றார். மேலும் மார்ச் 6-ம் தேதி ராகு-கேது பெயர்ச்சி ஆகின்றது. கேது சனியுடன் இணைந்து ஆறாம் இடத்தில் சஞ்சரிப்பதால் எதிரிகள் தொல்லைகள் அகலும். செய்கின்ற தொழிலில் அபார வளர்ச்சியை அடைவீர்கள். பன்னிரண்டாம் இடத்தில் ராகு வருகின்ற பொழுது கடல் தாண்டி செல்லும் யோகம் இருக்கின்றது.

குடும்பத்தில் உங்களது பேச்சுகளுக்கு மதிப்பு கொடுப்பார்கள். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். திருமணம் ஆகாத இளைய பருவத்தினருக்கு நல்ல வரன் அமையக்கூடும். மார்ச் 6-ம் தேதிக்குப் பிறகு வழக்கு விவகாரங்களில் உங்களுக்கு சாதகமான முடிவுகளை கொடுக்கும். எதிரிகள் உங்களிடம் சரணடையும் நிலை உருவாகும். மீண்டும் புதிய வழக்கு எதிலும் இறங்கி சிக்கலில் மாட்டிக்கொள்ள வேண்டாம்.

வீடு கட்டுவதற்கான ஹௌசிங் லோன் கிடைக்கும். சிலர் இருக்கும் வாகனத்தை விற்று புதியதாக சொகுசு வாகனம் வாங்குவார்கள்.

உத்யோகஸ்தர்களுக்கு:

பணியிடத்தில் நல்ல முன்னேற்றம் அடைவீர்கள். அலுவலகத்தில் உங்களது திறமைகள் பளிச்சிடும். சிலருக்கு முக்கியமான பொறுப்புகளும், பதவிகளும் தானாகவே கிடைக்கக்கூடும். குரு அதிசாரம் ஆகி தனுசு ராசியில் சஞ்சரிக்கின்ற காலத்தில் வேலைச்சுமை அதிகரிக்கக்கூடும். உங்களுக்கு கொடுக்கின்ற பொறுப்புகளை மற்றவர்களிடம் ஒப்படைக்காமல் நீங்களே முன்னின்று செய்வது நன்மை உண்டாகும். அவ்வாறு கொடுக்க நேர்ந்தால் உங்கள் மேற்பார்வையில் இருக்கும்படி பார்த்து கொள்ளுங்கள். தனியார் துறை, அரசு துறை, ரியல் எஸ்டேட் சம்மந்தப்பட்ட துறையில் இருக்கிறவர்களுக்கு நல்ல முன்னேற்றம் உண்டாகும்.

வியாபாரம்/தொழிற்பிரிவினர்:

வியாபாரம், தொழில் செய்கின்றவர்களுக்கு திருப்புமுனையாக இந்த வருடம் அமையும். உணவு, அழகு சாதனங்கள், ஆன்மீகம், மருத்துவம், எலக்ட்ரிகல், எலக்ட்ரானிக்ஸ், மளிகை பொருட்கள் வியாபாரம் செய்கின்றவர்கள் மிகப்பெரிய லாபத்தை அடைவார்கள்.

பெண்களுக்கு:

இல்லத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் ஒரு முடிவுக்கு வரக்கூடும். கணவன் மனைவி இடையே இருந்து வந்த கருத்து வேறுபாடு மறைந்து இணக்கம் உண்டாகும். குடும்ப பிரச்சனை அல்லது வேலை விஷயமாக பிரிந்து இருந்த தம்பதியர்கள் மீண்டும் இணைவார்கள்.உடன்பிறந்தவர்களுடன் இருந்து வந்த கருத்து மோதல்கள் நீங்கி சுமூகமான உறவு உண்டாகும். பூர்வீக சொத்துகளில் இருந்த வில்லங்கம் எல்லாம் சரி செய்து உங்களுக்கு உரிய பாகத்தை பெறுவீர்கள்.

உடல் நிலை

கடகம் ராசியினருக்கு முக்கியமான கிரகங்கள் சாதகமாக இருப்பதால் ஆரோக்கியத்தில் எவ்வித பாதிப்புகளும் உண்டாகாது. மார்ச் 13-ம் தேதி முதல் மே 19-ம் தேதி வரை  குரு அதிசாரம் பெற்று தனுசு ராசியில் சஞ்சரிக்கின்ற காலங்களில் மட்டும் மனதில் தளர்ச்சி உண்டாகும். சிலருக்கு தேவையற்ற பயத்தினால் மனஉளைச்சல் ஏற்படக்கூடும்.

மாணவமாணவியர்களுக்கு:

மாணவ – மாணவிகள் இந்த ஆண்டு கல்வியில் சிறந்து விளங்குவார்கள். போட்டி தேர்வுகளில், நீட் தேர்வுகளில் நல்ல மதிப்பெண் பெறுவார்கள்.  நல்ல கல்லூரியில் விரும்பிய பாடப்பிரிவில் சீட் கிடைக்கும். எதிர்கால வாழ்க்கைக்கு அஸ்திவாரம் போடும் காலம் என்பதால் நேரத்தை வீணாக்காமல் ஏதேனும் பயனுள்ள பகுதி நேர படிப்பை படித்துக் கொள்ளுங்கள்.

பரிகாரம்:

வியாழக்கிழமை அன்று அருகில் இருக்கும் கோயிலுக்கு சென்று தட்சிணாமூர்த்தியை வழிபட்டு வாருங்கள். நவகிரகங்களில் ராகுவுக்கும் கேதுவுக்கும் அர்ச்சனை செய்யுங்கள். செய்கின்ற காரியங்களில் தடைகள், தாமதம் அகல ராகு காலத்தில் துர்க்கை அம்மனுக்கு செவ்வாய்க்கிழமை அன்று விளக்கேற்றி வழிபாடு செய்யுங்கள்.

சிம்மம் 2019 ராசி பலன்:

2019 simmam new year rasi palan
2019 simmam rasi palangal

பொது பலன்கள்:

இந்த 2019 வருடம் சிம்மம் ராசியினருக்கு திருப்பங்களும், மாற்றங்களும் ஏற்படுகின்ற வருடமாக இருக்கப் போகின்றது. இதுவரை உங்களுக்கு ஏற்பட்ட சங்கடங்கள் யாவும் படிப்படியாக விலகி நன்மை நடைபெறப் போகின்றது. ராகு கடகம் ராசியில் இருந்து மிதுனம் ராசிக்கு மார்ச் 6-ம் தேதி பெயர்ச்சி ஆகின்றார். ராகு 11-ம் இடத்தில் இருக்கும் பொழுது எதிர்பாராத வகையில் தனலாபம் உண்டாகும். வருமானத்தை உயர்த்த புதிய வழி  கிடைக்கும்.

சனி பகவான் 5-ம் வீட்டில் தனுசு ராசியில் சஞ்சரிப்பதால் ஏதோ இனம் புரியாத வேதனை குடி இருக்கும். சிலர் சரியான முடிவு எடுக்க முடியாமல் திணறுவீர்கள். கேது மார்ச் 6-ம் தேதி பெயர்ச்சியாகி 5-ம் வீட்டில் வருகின்றபொழுது கடன் தொல்லைகள், தொழில் பின்னடைவு, ஆரோக்கியத்தில் குறைவு, தடைகள் எல்லாம் விலகும். கேது சனியுடன் இணைந்து ஐந்தாம் வீட்டில் இருப்பதால் உங்களுக்கு ஏற்படுகின்ற மறைமுக எதிர்ப்புகள், போட்டி, பொறாமையை ஒதுக்கிவிடுவார்கள்.

குரு அதிசாரம் பெற்று தனுசு ராசியில் 5-ம் வீட்டில் இருந்து கொண்டு உங்களது ராசியை பார்ப்பதால் திடீர் திருப்பங்கள் உண்டாகும். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளை நடத்தி வைப்பார். சமூகத்தில் இழந்த பெருமையை மீட்டெடுப்பீர்கள். நீண்ட நாட்களாக திட்டமிட்ட விஷயம் இப்பொழுது கைக்கூடி நடைபெறக்கூடும். சிலருக்கு புதிய வண்டி, வாகனம் வாங்கும் யோகம் இருக்கின்றது. தாய்வழி சொந்தபந்தங்கள் உங்களுக்கு பக்க பலமாக இருப்பார்கள். தாயருடன் இருந்து வந்த கருத்து வேறுபாடு மறைந்து ஒற்றுமை புலப்படும்.

முப்பது வயதை தாண்டிய சிம்மம் ராசியினருக்கு நிலையான வேலை அமையாமல் இருந்தவர்களுக்கு நல்ல வேலை அமையக்கூடும். இதுவரை சரியான வரன் அமையாமல் இருந்தவர்களுக்கு ஏப்ரல் மாதம் பிறகு மனதிற்கு பிடித்தமான வரன் அமையக்கூடும். கடல் கடந்து தொழில் அல்லது வேலை செய்யும் வாய்ப்பு வரக்கூடும். இந்த ஆண்டு பயணங்கள் அதிகரித்து அலைச்சல் இருந்தாலும் எண்ணிய காரியங்கள் யாவும் நிறைவேறும் ஆண்டாக இருக்கப் போகின்றது.

உத்யோகஸ்தர்களுக்கு:

ஆண்டின் தொடக்கத்தில் வேலைச்சுமை இருக்கக்கூடும். மார்ச் 13-ம் தேதி முதல் மே 19-ம் தேதி வரை குரு அதிசாரம் பெற்று தனுசு ராசியில் இருக்கின்ற பொழுது பணியிடத்தில் உங்களுக்கு சாதகமான காற்று வீசும். பணியிடத்தில் உங்களது மதிப்பு, மரியாதை உயரும். மேலதிகாரியிடம் பாராட்டும் பெறுவீர்கள். வேலை விஷயமாக வெளிநாடு அல்லது வெளிமாநிலம் செல்ல வாய்ப்பு வரக்கூடும்.

வியாபாரம்/தொழிற்பிரிவினர்:

தொழில், வியாபாரத்தில் இருந்து வந்த முட்டுக்கட்டைகள் விலகும். அரசாங்க ஆதரவு உண்டு. வெளிநாட்டு ஏற்றுமதி, இறக்குமதி, ஷிப்பிங், ஷேர் மார்க்கெட் போன்ற துறையில் இருக்கின்றவர்களுக்கு நல்ல லாபம் வரக்கூடும். பத்திரிகை, மீடியா, ஜவுளி, தானியங்கள் வியாபாரம், தங்கம் மற்றும் உலோக வியாபாரம் சிறப்பாக இருக்கக்கூடும். வேலையின்றி இருப்பவர்கள் குறைந்த முதலீட்டில் வியாபாரத்தை செய்யலாம்.

பெண்களுக்கு:

சிம்மம் ராசி பெண்களுக்கு இல்லத்தில் நற்பெயர் உண்டாகும். உங்களது ஆலோசனை இல்லத்தில் இருப்பவர்கள் ஏற்று கொள்வார்கள். மூன்றாம் நபர்களால் ஏற்பட்ட சிக்கல்களை இனம் கண்டு அவர்களிடம் இருந்து விலகிவிடுவீர்கள். கணவன் மனைவி இடையே அந்யோனியம் அதிகரிக்கும். குழந்தை வரம் எதிர்பார்த்துக் கொண்டு இருப்பவர்களுக்கு நல்ல மழலை செல்வம் கிட்டும். பூர்வீக சொத்துகளில் இருந்த பிரச்சனைகள் விலகி உங்களுக்கு உரிய பங்கு கிடைக்கும். சிலருக்கு வீடு, மனை வாங்கும் யோகம் இருக்கின்றது. இதுவரை காணாமல் போன மனதைரியம் இப்பொழுது திரும்ப வரக்கூடும். உற்றார், உறவினர்களின் விழாக்களை முன்னின்று நடத்துவீர்கள்.

உடல் நிலை:

உடல் நலனில் நல்ல முன்னேற்றம் அடைவீர்கள். உடலும் மனமும் உற்சாகத்துடன் இருக்கும். ஆண்டின் தொடக்கத்தில் சிலருக்கு உடல் உஷ்ணம், கொழுப்பு கட்டிகள் ,தோல் சம்மந்தமான பிரச்சனை வரக்கூடும்.

மாணவமாணவியர்களுக்கு:

மாணவ – மாணவியர்கள் கல்வியில் நல்ல மதிப்பெண் பெறுவார்கள். போட்டி தேர்வுகள், நீட் தேர்வு போன்றவற்றில் நல்ல மதிப்பெண் பெறுவீர்கள். எதிர்பார்த்த பாடப்பிரிவு  கிடைக்கும். சிலருக்கு மேற்படிப்புக்கு வெளிநாடு செல்லும் யோகமும் ஏற்படக்கூடும்.

பரிகாரம்:

அருகில் இருக்கும் சிவன் கோயிலுக்கு சென்று 11 முறை வலம் வாருங்கள். மேலும் திருமணத் தடை, வேலை  கிடைக்க அருகில் இருக்கும் கோயிலுக்கு சென்று துர்க்கை அம்மனை செவ்வாய்க்கிழமை அன்று விளக்கேற்றி வழிபட்டு வாருங்கள்.

கன்னி 2019 ராசி பலன்:

2019 kanni new year rasi palan
2019 kanni rasi palangal

பொது பலன்கள்:

இந்த 2019ம் வருடம் கன்னி ராசியினருக்கு தொழில், வியாபாரம், வேலை சிறப்பாக இருக்கப் போகின்றது. வருட தொடக்கத்தை விட பிற்பகுதியில் நல்ல முன்னேற்றம் அடைவீர்கள். குருவின் பார்வை சிறப்பாக இருப்பதால் சுபநிகழ்வுகள் நடைபெறக்கூடும். வீடு, மனை வாங்கும் கனவு நனவாகும். கேட்கின்ற இடத்தில் இருந்து பண உதவி கிடைக்கும்.

சனி பகவான் நான்காம் வீட்டில் இருந்து கொண்டு உங்களுக்கு பல வித சோதனைகளை கொடுத்து வந்தார். இளைய பருவத்தினருக்கு நிலையற்ற தொழில், வியாபாரம், செய்கின்ற வேலையில் நிலையற்ற தன்மை, சிறுசிறு பாதிப்புகளை சந்தித்து கொண்டு இருந்தீர்கள், இனி அது விலகும். இல்லத்தில் இருப்பவர்களுடன் வீண் விரோதத்தை கொடுத்து இருப்பார். சிலருக்கு ஊர்மாற்றம், வீடு மாற்றம், இடமாற்றம் ஏற்பட்டு இருக்கக்கூடும்.

ஆண்டின் தொடக்கத்தில் ராகு பகவான் 11-ம் இடத்தில் இருப்பதால் பொருளாதார வளர்ச்சி சிறப்பாக இருக்கக்கூடும். எதிர்பாராத விதமாக தனலாபத்தை கொடுத்து வந்தார். மார்ச் 6-ம் தேதி ராகு-கேது பெயர்ச்சி ஆகின்றது. கடகத்தில் இருக்கின்ற ராகு மிதுனம் ராசியிலும், மகரம் ராசியில் இருக்கின்ற கேது தனுசு ராசியிலும் சஞ்சரிக்கப் போகின்றார்கள். கேது சனியுடன் இணைந்து நான்காம் இடத்தில் இருக்கின்ற பொழுது சனி பகவானால் ஏற்பட்ட கெடுபலன்களை தடுப்பார்.

ராகு பகவான் 10-ம் இடத்தில் அதாவது மிதுனம் ராசியில் சஞ்சரிப்பதால் உங்களது ஜீவனஸ்தானம் வலுப்பெறும். இதுவரை பணியிடத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் படிப்படியாக குறைய தொடங்கும். கேது பகவான் சாதகமாக நான்காம் இடத்தில் இருப்பதால் சமூகத்தில் உங்களது மதிப்பு, மரியாதை உயரும்.

பயணத்தின் பொழுது கவனமாக இருக்க வேண்டும். திடீர் நண்பர்களாகும் நபர்களால் பிரச்சனை, பொருள் இழப்பு, விரயம் ஏற்படும் என்பதால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

உத்யோகஸ்தர்களுக்கு:

அலுவலகத்தில் மேலதிகாரியிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்த்திடுங்கள். தான் புடிச்ச முயலுக்கு மூன்று கால்கள் என்று வாக்குவாதம் செய்யாதீர்கள். உங்களுக்கு நெருங்கிய நண்பர்கள் அல்லது சக ஊழியர்கள் பகைவர் ஆக நேரிடும் என்பதால் எதிலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். யாரையும் பற்றி விமர்சனம் செய்து கொண்டு இருக்க வேண்டாம். புதியதாக வேலை தேடிக் கொண்டு இருப்பவர்களுக்கு நல்ல நிறுவனத்தில் இருந்து அழைப்பு வரக்கூடும். சிலருக்கு வெளியூர் அல்லது வெளிமாநிலத்தில் வேலை அமையக்கூடும். அரசுத்துறையில் பணிபுரிகின்றவர்கள் எதிர்பார்த்த கோரிக்கைகள் நிறைவேறும். முறைகேடான  வருமானம் வரும் பொழுது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அவற்றால் வேறு விதமான பிரச்சனைகள் ஏற்படும் என்பதால் கணக்கு வழக்கில் சரி பார்த்து கொள்ளுங்கள்.

அர்தாஷ்டமச்சனி அடுத்த ஆண்டு தான் விலக போவதால் செய்கின்ற வேலையில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மற்றவர்களிடம் பொறுப்புகளை ஒப்படைக்கும் பொழுது உங்கள் மேற்பார்வையில் வைத்து கொள்ளுங்கள். யாரையும் முழுமையாக நம்பி முக்கியமான பொறுப்புகளை கொடுக்க வேண்டாம்.

வியாபாரம்/தொழிற்பிரிவினர்:

வியாபாரத்தை புதியதாக தொடங்குவதை விட இருக்கும் வியாபாரத்தை சிறப்பாக நடத்தலாம். உங்களது கடின உழைப்பால் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். ராகு 10-ம் இடத்தில் வலுவாக இருப்பதால் கடல் கடந்து தொழில் அல்லது வியாபாரம் செய்வீர்கள். ஏற்றுமதி இறக்குமதி, மார்க்கெட்டிங், ஷிப்பிங், கமிஷன் துறை போன்றவற்றில் லாபம் வரக்கூடும். வெளிநாடு தொடர்புடைய நிறுவனங்களில் இருந்து ஆர்டர் வரக்கூடும். வியாபாரம், தொழிலை விரிவாக்கம் செய்வதற்கு அதிகமாக கடன் வாங்குவதை தவிர்த்திடுங்கள். வரவு, செலவு கணக்கை சரி பார்த்து கொள்ளுங்கள்.

பெண்களுக்கு:

கன்னி ராசி பெண்களுக்கு சிறப்பான வருடம் என்றே கூறலாம். செலவுகள் அதிகரிக்கும் என்பதால் அதனை சுபச்செலவாக மாற்றி கொள்ளுங்கள். வீட்டிற்கு தேவையான ஆடம்பர பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். தள்ளி போன திருமணம் நல்ல படியாக முடிவடையும். குழந்தை பாக்கியம் எதிர்பார்த்து கொண்டு இருப்பவர்களுக்கு மழலை செல்வம் கிட்டும்.

உடல் நிலை

மார்ச் மாதத்திற்குப் பிறகு தோல், வயிறு, உஷ்ணம், அஜீரணம் தொடர்பான பிரச்சனைகள் வரக்கூடும். நடுத்தர வயதை உடையவர்கள் உடல் நலனில் அக்கறை எடுத்துக் கொள்ளுங்கள்.

மாணவமாணவியர்களுக்கு:                     

கன்னி ராசி மாணவ- மாணவிகளுக்கு கல்வியில் வெற்றி பெரும் ஆண்டாக இருக்கப் போகின்றது. படிப்பில் ஆர்வம் கூடும். போட்டி தேர்வுகள், நீட் தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் பெறுவீர்கள். விரும்பிய பாடம் கிடைக்கும்.

பரிகாரம்:

சனிக்கிழமை பெருமாள் கோயிலுக்கு சென்று துளசி அர்ச்சனை செய்து வாருங்கள். வியாழக்கிழமை அன்று தக்ஷிணாமூர்த்தி அல்லது ஏதேனும் மகான், சாய் பாபாவை வணங்கி வாருங்கள்.

துலாம் 2019 ராசி பலன்:

2019 thulam new year rasi palan
2019 thulam rasi palangal

பொது பலன்கள்:

இந்த 2019ம் வருடம் துலாம் ராசியினருக்கு யோகமான வருடமாக இருக்கப் போகின்றது. ஆண்டு முழுவதும் குரு, கேது, சனி யோகமான அமைப்பில் இருப்பதால் துலாம் ராசியினருக்கு நன்மைகள் நடைபெறும் வருடமாக இருக்கப் போகின்றது. சமூகத்தில் உங்கள் மதிப்பு, மரியாதை உயரும். சிலர் திடீர் புகழ் அடைவீர்கள். அவரவர்களின் வயதுக்கேற்ப சாதனை படைப்பீர்கள்.

ராகு – கேது மார்ச் 6-ம் தேதி பெயர்ச்சி ஆகின்றது. பத்தாம் இடத்தில்  இருக்கின்ற ராகு ஒன்பதாம் இடத்தில் வருகின்ற பொழுது தாராளமான பணவரவு வந்தாலும் சேமிப்புகள் கரைய தொடங்கும். கேது சனியுடன் இணைந்து மூன்றாம் இடத்தில் இருப்பதால் யோகமான பலன்களை வழங்குவார். இதுவரை மனதில் தோன்றிய தேவையில்லாத பயம், அச்சம் நீங்கி மனதில் தைரியம், தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

வேலை அல்லது கல்வி சம்மந்தமாக வெளியூர் செல்ல நேரிடும். ராகு பகவான் 9-ம் இடத்தில் சஞ்சரிக்கும் பொழுது தொழிலில், வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் அடைவீர்கள். குரு பகவான் உங்களது தனஸ்தானத்தில் இருப்பதால் சுபநிகழ்வுகள் நடைபெறக்கூடும். நீண்ட காலமாக வரன் தேடி கொண்டு இருப்பவர்களுக்கு மனதிற்கு பிடித்தமான வரன் அமையக்கூடும்.

குரு பகவான் மார்ச் 13-ம் தேதி முதல் மே 19-ம் வரை அதிசாரம் பெற்று தனுசு ராசியில் சஞ்சரிக்கும் பொழுது எதிர்பாராத வகையில் நற்பலன்களை கொடுப்பார். சினிமா,கலைத்துறை, பத்திரிகை, ஊடகத்துறையில் பணிபுரிகின்றவர்களுக்கு வசந்த காலம் என்றே கூறலாம். திடீரென்று புகழும், பிரபலமும் அடைவீர்கள்.

இழுபறியாக இருந்த வழக்குகள் உங்களுக்கு சாதகமான முடிவு வரக்கூடும். வங்கியில் எதிர்பார்த்த லோன் கிடைக்கும். சுய ஜாதகத்தில் துலாம் ராசியினருக்கு நல்ல தசா புத்திகள், கிரகங்கள் வலுவாக இருந்தால் திடீர் அதிர்ஷ்டம் உண்டாகும். இல்லத்தில் இருப்பவர்களுடன் இன்ப சுற்றுலா மற்றும் ஆன்மிக சுற்றுலா சென்று வருவீர்கள். நிலுவையில் இருந்த வந்த பிரார்த்தனைகளை இல்லத்தில் இருப்பவர்களுடன் செய்து முடிப்பீர்கள்.

உத்யோகஸ்தர்களுக்கு:

அரசு, தனியார் துறையில் பணிபுரிகின்றவர்களுக்கு வேலைப்பளு குறைந்து, சம்பள உயர்வு, எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். சிலருக்கு உபரி வருமானம் வரக்கூடும். சரியான வேலை அமையாமல் சோர்ந்து கிடந்தவர்களுக்கு மனதிற்கு பிடித்தமான வேலை அமையக்கூடும். கிரகங்கள் சாதகமாக இருக்கும் பொழுது சிறிது முயற்சி செய்தால் நல்ல பலனை எதிர்பார்க்கலாம்.

வியாபாரம்/தொழிற்பிரிவினர்:

இதுவரை மந்தமாக நடைபெற்ற வியாபாரம் சூடு பிடிக்க தொடங்கும். வியாபாரத்தில் போட்டி, பொறாமைகள், மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். சனி, குரு சாதகமாக இருப்பதால் தொழிலில் நல்ல வளர்ச்சி அடைவீர்கள். தானிய  வியாபாரம், மளிகை பொருட்கள், ஜவுளி, உணவு, கெமிக்கல், கமிஷன், வாகன உதிரி பாகங்களால் லாபம் அடைவீர்கள்.

பெண்களுக்கு:

இதுவரை உங்களை சரியாக புரிந்து கொள்ளாமல் பகையை பாராட்டியவர்கள் மீண்டும் உங்களுடன் இணைவார்கள். போலியாக பழகிய நபர்களிடம் இருந்து விலகுவீர்கள். பெற்றோர்களின் அறிவுரை உங்கள் நன்மைக்காக தான் என்பதை உணருவீர்கள். குடும்ப தேவைகள் பூர்த்தியாகும். குழந்தை பாக்கியம் எதிர்பார்த்து கொண்டு இருப்பவர்களுக்கு நல்ல மழலை செல்வம் கிட்டும். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். பிள்ளைகளால் பெருமை உண்டு. உறவினர்கள், நண்பர்கள் உங்களுக்கு தக்க சமயத்தில் உதவ முன்வருவார்கள்.

உடல் நிலை

உடல்நலம் சீராகும். கண், மயக்கம், பித்தம், வயிறு சம்மந்தமான பிரச்சனைகளில் அவதிப்பட்டு கொண்டு இருந்தவர்கள் இப்பொழுது குணமடைவார்கள். நடுத்தர வயதில் இருக்கும் துலாம் ராசியினர் உடல் நலனில் அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும். சிலருக்கு ரத்த அழுத்தம், சர்க்கரை, ஹார்மோன் குறைபாடு, தைராய்டு பிரச்சனைகள் கண்டுபிடிக்கப்படும் என்பதால் உடல் பரிசோதனை செய்து கொள்வது நல்லது.

மாணவமாணவியர்களுக்கு:

மாணவர்கள் போட்டிகளில் வெற்றி பெறுவார்கள். பகுதி நேரத்தை வீணாக்காமல் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு ஏதேனும் பயனுள்ள கோர்ஸ் சேர்ந்து படியுங்கள். உயர்கல்வி கற்க இதுவரை இருந்த வந்த தடைகள் விலகும்.

பரிகாரம்:

துலாம் ராசியினருக்கு இந்த வருடம் முழுவதும் கிரகங்களின் ஆசியும், தெய்வத்தின் அருளும் பரிபூரணமாக கிடைப்பதால் குலதெய்வத்தை வழிபடுங்கள். மேலும் சகல விதமான தடைகள் அகல முன்னோர்களை வழிபாடு செய்யுங்கள்.

விருச்சிகம் 2019 ராசி பலன்:

2019 viruchigam new year rasi palan
2019 viruchigam rasi palangal

பொது பலன்கள்:

இந்த 2019ம் வருடம் விருச்சிகம் ராசியினருக்கு எதையும் எதிர்கொள்ளும் துணிவும், தைரியமும் உண்டாகும். சமூகத்தில் மதிப்பு, மரியாதை கூடும். ஆண்டின் தொடக்கத்தில் கேது பகவான் மூன்றாம் இடத்தில் சாதகமாக இருப்பதால் தாராளமான பணவரவு வரக்கூடும். நல்லவர்களின் நட்பு கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் உங்களுக்கு பக்க பலமாக இருப்பார்கள். மனக்குழப்பங்கள் அகலும். ராகு ஒன்பதாம் இடத்தில் இருக்கும் பொழுது பொன், பொருள் சேர்க்கை உண்டாகும்.

இந்த ஆண்டு முழுவதும் சனி பகவான் உங்கள் ராசிக்கு இரண்டாம் இடத்தில்  தொடர்வதால் அனாவசிய பேச்சுகளை தவிர்த்திடுங்கள். இல்லத்தில் இருப்பவர்களுடன் விட்டுக் கொடுத்து செல்லுங்கள். அவர்கள் உங்களை சரியாக புரிந்து கொள்ளாமல் நடந்து கொண்டாலும் அதனை பெரிது படுத்தாமல் இருப்பது நல்லது. ராகு – கேது மார்ச் 6-ம் தேதி பெயர்ச்சி ஆகின்றது. ராகு உங்கள் ராசிக்கு எட்டாம் இடத்திலும், கேது இரண்டாம் இடத்திலும் வர போகின்றார். கேது சனியுடன் இணைந்து தனுசு ராசியில் சஞ்சரிக்கும் பொழுது, சனியின் கெடுபலன்களை தடுப்பார்.

ஓய்வு எடுக்க முடியாதபடி வேலைச்சுமை அதிகரிக்கும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். முக்கியமான முடிவுகளில் தனித்து நின்று செயல்பட்டால் வெற்றி உண்டாகும். பொதுவாகவே விருச்சிகம் ராசியினர்கள் தன்னிச்சையாக செயல்பட்டால் எதிலும் வெற்றி உண்டாகும். மற்றவர்கள் புகழும் படி உங்களது வாழ்க்கை தரம் உயரும். சொத்து சம்மந்தமான பிரச்சனைகள் ஒரு முடிவுக்கு வரக்கூடும். வீடு, மனை உங்களது பெயரிலே வாங்கும் யோகம் இருக்கின்றது.

ஏழரைச்சனி இந்த ஆண்டோடு முடிய போவதால் துன்பங்கள், கவலை எல்லாம் நீங்கும். குரு மார்ச் 13-ம் தேதி முதல் மே 19 வரை அதிசாரம் பெற்று தனுசு ராசியில் அதாவது சொந்த வீட்டில் சஞ்சரிக்கின்ற காலத்தில் வேலையில், தொழிலில் நல்ல வளர்ச்சி உண்டாகும். கடன் பிரச்சனை இருந்தவர்களுக்கு அதனை அடைக்கும் அளவிற்கு ஒரு வழி பிறக்கும். இதுவரை தாமதமாகிப் போனவைகள், நடைபெறாத விஷயங்கள் யாவும் நல்லபடியாக நடைபெறக்கூடும்.

உத்யோகஸ்தர்களுக்கு:

பணியிடத்தில் கூடுதலான பொறுப்புகள் வரக்கூடும். சிலருக்கு மற்றவர்களின் வேலையை சேர்த்து செய்ய வேண்டி வரக்கூடும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும். சிலருக்கு உபரி வருமானம் வரக்கூடும். பணியிடத்தில் உங்களது திறமைகள் பளிச்சிடும். சக  ஊழியர்களின் ஆதரவால் தேங்கி கிடந்த பணிகளை விரைந்து முடித்துக் காட்டுவீர்கள். கலைத்துறை, வெளிநாட்டு சம்மந்தமான நிறுவனத்தில் பணிபுரிபவர்கள், தொலைகாட்சி, ஊடகத்துறை, கணினி , அன்றாடம் சம்பளம் வாங்குபவர்களுக்கு எல்லாம் முன்னேற்றமான காலமாக அமையக்கூடும்.

வியாபாரம்/தொழிற்பிரிவினர்:

செய்கின்ற தொழிலில், வியாபாரத்தில் நல்ல லாபம் வரக்கூடும். குரு அதிசாரம் பெற்று தனுசு ராசியில் சஞ்சரிக்கும் காலத்தில் புதிய வியாபாரம் தொடங்குவது, கடையை விரிவாக்கம் செய்வது, பெரிய முதலீடு செய்வதற்கு எல்லாம் ஏற்ற காலமாக இருக்கக்கூடும்.

பெண்களுக்கு:

குருவின் பார்வை சிறப்பாக இருப்பதால் இல்லத்தில் சுபகாரிய பேச்சு வார்த்தைகள் நல்ல படியாக முடிவடையும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை புலப்படும். உறவினர்களிடம் அதிகம் உரிமை எடுத்து கொள்ள வேண்டாம். குழந்தை பாக்கியம் எதிர்பார்த்து கொண்டு இருப்பவர்களுக்கு மார்ச் மாதத்திற்குப் பிறகு நல்ல செய்தி வரக்கூடும். இதுவரை சேமித்து வைத்த பணத்தை இல்லத்தில் நடைபெறும் சுபகாரியத்திற்கு கொடுத்து உதவுவீர்கள். உங்களது பெண் பிள்ளையின் திருமணம், சீமந்தம் போன்றவற்றிக்கு சீர்வரிசைப் பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். திருமணம் ஆகாத கன்னிகளுக்கு மனதிற்கு பிடித்தமான மணவாழ்க்கை அமையக்கூடும்.

 உடல் நிலை

தலைவலி, மஞ்சள் காமாலை, அலர்ஜி, காய்ச்சல், பல் வலி, காது வலி வந்து நீங்கும். உடல் நலனில் அக்கறை எடுத்துக் கொள்ளுங்கள். மருத்துவர் பரிசோதனையின்றி நீங்களே மருந்துகளை உட்கொள்ள வேண்டாம்.

மாணவமாணவியர்களுக்கு:

மாணவ – மாணவியர்களுக்கு கல்வில் ஆர்வம் அதிகரிக்கும். விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டு பரிசும் பெறுவீர்கள்.

பரிகாரம்:

ஆண்டின் தொடக்கத்தில் குலதெய்வத்தை வழிபடுங்கள். குலதெய்வம் எது என்று சரியாக தெரியாதவர்கள் செவ்வாய்க் கிழமை அன்று முருக பெருமானை வழிபட்டு வாருங்கள்.

தனுசு 2019 ராசி பலன்:

2019 dhanusu new year rasi palan
2019 dhanusu rasi palangal

பொது பலன்கள்:

இந்த 2019ம் வருடம் தனுசு ராசியினருக்கு மாற்றங்களும், ஏற்றங்களும் ஏற்படுகின்ற வருடமாக இருக்கப் போகின்றது. எந்த ஒரு காரியத்தை தொடங்கும் பொழுதும் தீர யோசித்து செயலில் ஈடுபடுங்கள். ஆவேச பேச்சு, அவசர முடிவை எடுப்பதை தவிர்த்தாலே இந்த வருடம் வெற்றி பெரும் ஆண்டாக இருக்கப் போகின்றது.

சனி பகவான் இந்த ஆண்டு முழுவதும் உங்களது ஜென்ம ராசியில் தொடர போகின்றார். மார்ச் 6-ம் தேதி ராகு கேது பெயர்ச்சி ஆகின்றது. கேது பகவான்  சனியுடன் இணைந்து உங்கள் ராசியில் சஞ்சரிக்கும் பொழுது, சனியின் கெடுபலன்களை தடுப்பார். உங்கள் ராசிநாதன் குரு மார்ச் 13ம் தேதி முதல் மே 19ம் தேதி வரை அதிசாரம் பெற்று உங்களது ராசியில் அமர்வதால் தொட்டது துலங்கும். அபார ஆற்றல் பிறக்கும்.

பொருளாதார வளர்ச்சி ஏற்படக்கூடும். இல்லத்தில் மங்கள நிகழ்வுகள் நடைபெறக்கூடும். ஏழரைச்சனி நடைபெறும் பொழுதுதான் பல தனுசு ராசியினருக்கு வீடு கட்டுவது, புதிய மனை வாங்குவது, திருமணம் போன்ற சுப காரியங்கள் நடைபெறக்கூடும். சனி பகவான் உங்கள் ராசியில் அமர்ந்து கொண்டு வாழ்க்கை பாடத்தை கற்றுக் கொடுப்பார். சுயஜாதகத்தில் நல்ல தசை புத்திகள் மற்றும் கிரகங்கள் வலுவாக இருந்தால் எவ்வித தீய பலன்களும் நடைபெறாது. 

தனுசு ராசியினர்கள், எனக்கு மட்டும் ஏன் இப்படி எல்லாம் நடைபெறுகிறது என்று புலம்பி கொண்டு இருக்காமல், மாற்றங்கள் எது நிகழ்ந்தாலும் தயங்காமல் ஏற்றுக் கொள்ளுங்கள். இந்த ஆண்டை விட அடுத்த ஆண்டு தனுசு ராசியினருக்கு சிறப்பான பலன்களை தரக்கூடியதாக இருக்கின்றது. புதிய மனை, வீடு வாங்கும் பொழுது வில்லங்கம் ஏதேனும் உள்ளதா என்பதை சரி பார்த்துக் கொள்ளுங்கள். குரு பகவான் அதிசாரம் பெற்று உங்கள் ராசியில் அமரும் பொழுது நல்லவர்கள் யார், தீயவர்கள் யார் என்பதை உணர்வீர்கள்.

உத்யோகஸ்தர்களுக்கு:

பணியிடத்தில் வேலைப்பளு அதிகரிக்கும். உங்களுக்கு கொடுக்கின்ற பொறுப்புகளை நேரத்திற்கு முடித்து கொடுத்து விடுங்கள். சக ஊழியர்களின் ஆதரவால் பணிகளை விரைந்து முடித்துக் கொடுப்பீர்கள். வேலை விஷயமாக அதிகம் அலைச்சல், பயணங்கள் மேற்கொள்ள வேண்டி வரக்கூடும். சிலருக்கு விரும்பத்தகாத மாற்றங்கள் ஏற்படக்கூடும். பணியிடத்தில் புறம் பேசுவது, வெட்டி பேச்சுகளை தவிர்த்திடுங்கள்.

வியாபாரம்/தொழிற்பிரிவினர்:

வியாபாரம் மற்றும் செய்கின்ற தொழிலை தொடர்ந்து செய்து வந்தாலே போதுமானது. புதிய முயற்சிகள், பெரிய முதலீடு போன்றவற்றை தவிர்த்திடுங்கள். பக்கத்தில் இருக்கும் கடையை பார்த்து கடன் வாங்கி விரிவாக்கம், அழகு செய்வது எல்லாம் தவிர்த்திடுங்கள். ரியல் எஸ்டேட், கமிஷன், மண்டி, அரசி வியாபாரம், எண்ணெய் போன்ற வகையால் லாபம் வரக்கூடும். பழைய வாடிக்கையாளர்கள் மீண்டும் வருவார்கள். போட்டிகள், பொறாமைகளை சந்திக்க நேரிடும். அரசு துறையில் இருப்பவர்களுக்கு அதிகம் உழைக்க வேண்டி வரக்கூடும். தொழில் விஷயமாக நீண்ட தூர பயணங்கள் மேற்கொள்ள வேண்டி வரக்கூடும். பயணங்களால் தனலாபம் உண்டு.

பெண்களுக்கு:

இல்லத்தில் தேவையில்லாமல் யாரையும் பகைத்துக் கொள்ள வேண்டாம். அனாவசிய பேச்சுகள் சிக்கலில் முடியக்கூடும். ஜென்மத்தில் இருக்கும் சனி பகவான் உங்கள் ராசிக்கு ஏழாம் இடத்தைப் பார்ப்பதால் கணவன் மனைவி இடையே சண்டை, சச்சரவு தோன்றி மறையக்கூடும். வீண் பிடிவாதங்கள், ஈகோ தவிர்த்திவிட்டு, விட்டுக்கொடுத்து செல்லுங்கள். அக்டோபர் மாதம் குரு பெயர்ச்சியாகி உங்கள் ராசியில் அமரும் பொழுது மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும். உங்களுக்கு ஏற்பட்ட பிரச்சனைகள் யாவும் படிப்படியாக குறைய தொடங்கும். பிள்ளைகளால் பெருமை உண்டு. உங்களை சரியாக புரிந்து கொள்ளாமல் இருந்தவர்கள் உங்களின் மேன்மையை அறிந்து கொண்டு சரணடையும் நிலை உருவாகும்.

உடல் நிலை

மயக்கம், பித்தம் போன்ற உபாதைகள் வரக்கூடும். அவ்வப்பொழுது மருத்துவ செலவுகள் ஏற்படக்கூடும்.

மாணவமாணவியர்களுக்கு:

மாணவர்கள் சிரத்தை எடுத்து படிக்க வேண்டும்.  பெற்றோர்கள் பிள்ளைகளை உங்களது மேற்பார்வையில் இருக்கும் படி பார்த்து கொள்ளுங்கள். எதிர்காலம் கருதி பகுதி நேரத்தை வீணாக்காமல் ஏதேனும் ஒரு பயனுள்ள கோர்ஸில் சேர்ந்து  படித்து வைத்துக் கொள்ளுங்கள்.

பரிகாரம்:

அருகில் இருக்கும் சிவன் ஆலயத்திற்கு வியாழக்கிழமை அல்லது ஞாயிற்றுககிழமையில் சென்று தரிசனம் செய்து வாருங்கள். மேலும் தடைகள் அகல குலதெய்வ வழிபாட்டை மேற்கொள்ளுங்கள்.

மகரம் 2019 ராசி பலன்:

2019 magaram new year rasi palan
2019 makara rasi palangal

பொது பலன்கள்:

இந்த 2019ம் வருடம் மகரம் ராசியினருக்கு சிறப்பான வருடமாக இருக்கப் போகின்றது. மகரம் ராசியினருக்கு விரயச்சனி தொடர்வதால் வரவை காட்டிலும் செலவுகள் அதிகரிக்கும். இதுவரை கடகம் ராசியில் இருக்கின்ற ராகு மார்ச் 6-ம் தேதி பெயர்ச்சியாகி மிதுனம் ராசியில் சஞ்சரிக்க போகின்றார். உங்கள் ராசியில் அமர்ந்த இருந்த கேது பகவான் பெயர்ச்சியாகி சனியோடு இணைந்து தனுசு ராசியில் சஞ்சரிக்க போகின்றார்.

ராகு பகவான் 6-ம் இடத்தில் இருக்கும் பொழுது செய்கின்ற வேலையில்  வெற்றி உண்டாகும். வேலை அல்லது தொழில் விஷயமாக தூரதேச பயணங்கள் மேற்கொள்ள வேண்டி வரக்கூடும். சிலருக்கு பயணங்களால் ஆதாயம் உண்டாகும். பணவரவு ஓரளவிற்கு இருந்தாலும் செலவுகள் அடுத்தடுத்து இருந்து கொண்டே இருக்கக்கூடும். கேது பகவான் பெயர்ச்சியாகி 12-ம் வீட்டில் சஞ்சரிக்கின்ற பொழுது சுப விரயங்கள் ஏற்படக்கூடும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். சிலர் கோயில் திருப்பணிகளுக்கு நன்கொடை கொடுத்து உதவீர்கள்.  

வழக்குகளில் உங்களுக்கு சாதகமான முடிவு வரக்கூடும். பல நாட்களாக எதிர்பார்த்திருந்த பாக பிரிவினை, சொத்து பிரச்சனைகள் எல்லாம் ஒரு முடிவுக்கு வரக்கூடும். கடன் தொல்லையில் இருந்து விடுபட ஒரு வழி  பிறக்கும். பொருளாதார வளர்ச்சி ஏற்படக்கூடும்.

குருவின் பார்வை சிறப்பாக இருப்பதால் பிள்ளைகளின் எதிர்காலம் கருதி எடுக்கின்ற முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். பிள்ளைகளின் கல்யாணக் கனவு நனவாகும். உங்களது மகளுக்கு அல்லது மகனுக்கு எதிர்பார்த்த நிறுவனத்தில் இருந்து அழைப்பு வரக்கூடும். மகரம் ராசியினர் இந்த ஆண்டு யாரையும் பகைத்து கொள்ளாமல் இருப்பது நல்லது. சிலருக்கு எளிதாக முடிக்க வேண்டிய காரியங்களை கூட சற்று ஒரு முறைக்கு பல முறை முயற்சி செய்த பிறகே நடைபெறக்கூடும்.

உத்யோகஸ்தர்களுக்கு:

தனியார் துறையில் பணிபுரிகின்றவர்களுக்கு நல்ல வளர்ச்சி ஏற்படக்கூடும். சக ஊழியர்கள் உங்களுக்கு பக்க பலமாக இருப்பார்கள். குரு பகவான் அதிசாரம் பெற்று தனுசு ராசியில் இருக்கின்ற காலத்தில் வேலைச்சுமை, அலைச்சல், அதிகம் பயணங்கள் மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலை உருவாகும். மறைமுக எதிர்ப்புகள் தோன்றக்கூடும். அரசு சார்ந்த துறையில் இருக்கின்றவர்கள் செய்கின்ற வேலையில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

வியாபாரம்/தொழிற்பிரிவினர்:

தொழிலில், வியாபாரத்தில் நல்ல லாபத்தை அடைவீர்கள். பகைவர்களால் வெற்றி கொள்வீர்கள். நெல், கோதுமை, கேழ்வரகு வகையால் லாபம் வரக்கூடும். கால்நடை வைத்து இருக்கின்றவர்களுக்கு எதிர்பார்த்த லாபம் வரக்கூடும்.

பெண்களுக்கு:

இல்லத்தில் ஏற்பட்ட குழப்பங்கள் யாவும் படிப்படியாக விலகும். குரு பகவானின் ஒன்பதாம் இடத்து பார்வை உங்கள் ராசிக்கு ஏழாம் வீட்டில் பதிவதால் நல்ல மணவாழ்க்கை அமையக்கூடும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். குறிப்பாக சமையல் சாதனங்களை வாங்கி மகிழ்வீர்கள். தாயார் மற்றும் தாய்வழி உறவினர்கள் உங்களுக்கு பக்க பலமாக இருப்பார்கள். குரு பகவான் 11-ம் இடத்தில் இருப்பதால் பொன், பொருள், விலையுர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

உடல் நிலை

உடல் நலனில் பெரிதும் எவ்வித பாதிப்புகளும் உண்டாகாது. குரு அதிசாரம் இருக்கின்ற காலத்தில் மட்டும் மனஉளைச்சல், தாழ்வு மனப்பான்மை  ஏற்படக்கூடும்.

மாணவமாணவியர்களுக்கு:

மாணவ – மாணவிகளுக்கு கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும். குருவின் பார்வை சிறப்பாக இருப்பதால் போட்டிகளில் கலந்து கொண்டு பரிசும் பெறுவீர்கள். விரும்பிய பாடப்பிரிவில் மற்றும் எதிர்பார்த்த கல்லூரியில் சீட் கிடைக்கும். மேற்படிப்புக்கு வெளிநாட்டில் முயற்சி செய்கின்றவர்களுக்கு நல்ல செய்தி வரக்கூடும். குரு பகவான் மார்ச் 13- ம் தேதி முதல் மே 19-ம் தேதி வரை அதிசாரம் பெற்று 12-ம் இடத்தில் இருப்பதால் அதிகம் சிரத்தை எடுத்து படிக்க வேண்டும். பிள்ளைகளின் கவனம் நவீன கருவிகளின் மீது செல்லும் என்பதால் பெற்றோர்கள் அவர்களை மேற்பார்வையில் வைத்து கொள்வது நல்லது.

பரிகாரம்:

சங்கடஹர சதுர்த்தி அன்று பிள்ளையாரை வழிபட்டு வாருங்கள் சகல விதமான சங்கடங்களை போக்குவார்.

கும்பம் 2019 ராசி பலன்:

2019 kumbam new year rasi palan
2019 kumba rasi palangal

பொது பலன்கள்:

இந்த 2019ம் வருடம் கும்பம் ராசியினருக்கு நினைத்த காரியங்கள் நினைத்தபடி நடைபெறக்கூடும். உங்கள் ராசிநாதன் சனி பகவான் குருவின் வீடான தனுசு ராசியில் அமர்ந்து கொண்டு உங்களது ராசியை பார்ப்பதால் தொட்டது துலங்கும். இந்த வருடம் அவரவர்களின் வயதிற்கேற்ப படிப்பு, வேலை, திருமணம், குழந்தை பாக்கியம் கிடைக்கும் வருடமாக இருக்க போகின்றது.

ஆண்டின் தொடக்கத்தில் கடகம் ராசியில் சஞ்சரிக்கின்ற ராகு மார்ச் 6-ம் தேதி மிதுனம் ராசியில் சஞ்சரிக்க போகின்றார். மகரம் ராசியில் இருக்கின்ற கேது தனுசு ராசியில் சஞ்சரிக்க போகின்றார். ராகு 5-ம் இடத்திலும், கேது 11-ம் இடத்திலும் சஞ்சரிப்பதால் பொருளாதார வளர்ச்சி ஏற்படக்கூடும். கேது சனியுடன் இணைந்து குருவின் வீடான தனுசு ராசியில் அதாவது 11-ம் இடத்தில் சஞ்சரிக்கும் பொழுது வெளியூர் முயற்சிகள் நல்ல படியாக நடைபெறக்கூடும். வேலை அல்லது கல்வி விஷயமாக வெளியூர் பயணங்கள் மேற்கொள்ள வேண்டி வரக்கூடும்.

குரு பகவான் மார்ச் 13- ம் தேதி முதல் மே 19-ம் தேதி வரை அதிசாரம் பெற்று தனது சொந்த வீட்டில் சஞ்சரிக்கின்ற பொழுது எதிர்பாராத விதமாக நல்ல முன்னேற்றத்தை கொடுப்பார். நீண்ட நாட்களாக வீடு, மனை, பிளாட் வாங்க வேண்டும் என்று நினைத்து கொண்டு இருந்தவர்களுக்கு கனவு நனவாகும். இழுபறியாக இருந்து வந்த சொத்து பிரச்சனைகள் யாவும் ஒரு முடிவுக்கு வரக்கூடும். உங்களுக்கு உரிய பாகம் பிரித்து கொடுக்கப்படும். வீடு கட்டுவதற்கான ஹவுசிங் லோன் கிடைக்கும்.

இதுவரை கடன் தொல்லையில் அவதிப்பட்டு கொண்டு இருப்பவர்களுக்கு கடனை அடைக்கும் அளவிற்கு ஒரு விடிவு காலம் பிறக்கும். குருவின் அதிசாரம் காலங்களில் வீட்டில் இருப்பவர்களுடன் கலந்து பேசி முடிவு செய்யுங்கள். முன்கோபத்தை தவிர்த்திடுங்கள். எதையும் ஒரு முறைக்கு பல முறை சிந்தித்து செயல்படுங்கள். சோம்பலை உதறித்தள்ளி சுறுசுறுப்பாக செயல்பட்டாலே வெற்றி உண்டாகும்.

உத்யோகஸ்தர்களுக்கு:

பணியிடத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். வேலை விஷயமாக வெளிநாடு அல்லது வெளிமாநிலம் செல்ல வாய்ப்புகள் வரக்கூடும். இதுவரை நடைபெறாத நல்ல விஷயங்கள் யாவும் இப்பொழுது படிப்படியாக நடைபெறக்கூடும். எதிர்பார்த்த பதவி உயர்வு, சம்பள உயர்வு, இடமாற்றம் எல்லாம் உண்டாகும். தொல்லையாக இருந்தவர்கள் உங்களின் மேன்மையை அறிந்து கொண்டு நட்பு பாராட்டுவார்கள். எலக்ட்ரிகல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் துறை, பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிகின்றவர்கள் நல்ல முன்னேற்றம் அடைவீர்கள். சிலருக்கு உபரி வருமானம் வரக்கூடும். கமிஷன், ஷேர், ஸ்பெகுலேஷன், பங்குச்சந்தை, சூதாட்டம் போன்றவற்றால் தனவரவு உண்டு.

வியாபாரம்/தொழிற்பிரிவினர்:

தொழிலை விரிவாக்கம் செய்வது, வேறு கிளைகளை தொடங்குவது, புதிய தொழில் செய்வது எல்லாம் இப்பொழுது கைக்கொடுக்கும். மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். உணவு, சிற்றுண்டி விடுதி, வாடகை, ஜவுளி துறை, கலைத்துறை, லாட்ஜிங், வண்டி, வாகனம் துறையில் இருக்கின்றவர்களுக்கு வருமானம் வரும்.

பெண்களுக்கு:

கும்ப ராசி பெண்கள் உற்சாகத்துடன் காணப்படுவார்கள். மனதிற்கு இனிமையான சம்பவங்கள் நடைபெறக்கூடும். உற்றார், உறவினர்களின் விருந்து, விழாக்களில் கலந்து கொள்வீர்கள். இல்லத்தில் உங்களது கருத்துகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள். சுயதொழில் செய்து வரும் பெண்களுக்கு வங்கி  கடன் எளிதாக கிடைக்கும். பணியிடத்தில் உங்களது செல்வாக்கு உயரும். தள்ளிப்போன திருமண வாய்ப்பு இப்பொழுது கூடி வரும்.

உடல் நிலை:

உடல் நலம் சீராக இருக்கக்கூடும். மார்ச் மாதத்திற்குப் பிறகு பித்தம், மயக்கம், வயிறு சம்மந்தமான உபாதைகள் வரலாம்.

மாணவமாணவியர்களுக்கு:

மாணவர்கள் சிரத்தை எடுத்து படிக்க வேண்டும். குரு மார்ச் 13-ம் தேதி அதிசாரம் பெற்று தனுசு ராசியில் சஞ்சரிக்கின்ற பொழுது கல்வியில் சிறந்து விளங்குவீர்கள். ஆசிரியரின் ஆலோசனை கிடைக்கும். பகுதி நேரத்தை வீணாக்காமல் உங்களது எதிர்காலம் கருதி ஏதேனும் ஒரு கோர்ஸில் சேர்ந்து படியுங்கள்.

பரிகாரம்:

செவ்வாய்க்கிழமை அன்று ராகு காலத்தில் துர்கை அம்மனை வழிபட்டு வாருங்கள். வியாழக்கிழமை அன்று தட்சிணாமூர்த்தியை வழிபட்டு  வாருங்கள். முடிந்தால் இயலாதவர்களுக்கு உங்களால் இயன்றதை வாங்கி கொடுங்கள்.

மீனம் 2019 ராசி பலன்:

2019 meenam new year rasi palan
2019 meena rasi palangal

பொது பலன்கள்:

இந்த 2019ம் வருடம் மீனம் ராசியினருக்கு திருப்புமுனையாக அமைய போகின்றது. இந்த வருடம் முழுவதும் உங்களுக்கு வளர்ச்சியான வருடமாக இருக்க போகின்றது. எடுக்கின்ற முயற்சிகளில் வெற்றி உண்டாகும். திருப்திகரமான பணவரவு வரக்கூடும்.

ராசிநாதன் குரு பகவான் ஒன்பதாம் இடத்தில் இருந்து கொண்டு உங்களது ராசியைப் பார்ப்பதால் யோகமான வருடமாக இருக்கப் போகின்றது. ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே உங்களுக்கு படிப்படியான முன்னேற்றம் ஏற்பட போகின்றது. உங்கள் ராசிநாதன் குரு மார்ச் 13-ம் தேதி முதல் மே-19ம் தேதி வரை அதிசாரம் பெற்று தனுசு ராசியில் சஞ்சரிக்கின்ற காலங்களில் எதிர்பாராத விதமாக அபார வளர்ச்சி அடைவீர்கள். வீடு, மனை வாங்கும் கனவு நனவாகும். கேட்கின்ற இடத்தில் இருந்து பணஉதவி கிடைக்கும்.

மார்ச் 6-ம் தேதி ராகு – கேது பெயர்ச்சி ஆகின்றது. ராகு நான்காம் இடத்தில்  இருக்கின்ற பொழுது கேட்கின்ற இடத்தில் இருந்து உதவி கிடைக்கும். மகரம் ராசியில் இருக்கின்ற கேது பெயர்ச்சியாகி தனுசு ராசியில் சனியுடன் இணைய போகின்றது. கேது சனியுடன் இணைந்து குருவின் வீடான தனுசு ராசியில் அதாவது உங்களது 10-ம் வீட்டில் இருப்பதால் மிகுந்த நற்பலன்கள் உண்டாகும். புதிய வாய்ப்புகளும், பொறுப்புகளும் வரக்கூடும்.

வங்கி சம்மந்தப்பட்ட தேர்வுகள், மத்திய மாநில அரசுகளின் போட்டி தேர்வுகளில் முயற்சி செய்கின்றவர்களுக்கு வெற்றி உண்டாகும். பெற்றோர்கள் மற்றும் மூத்தவர்களின் ஆலோசனை மற்றும் ஆசியும் கிட்டும். தாயாரின் உடல் நலனில் அக்கறை எடுத்துக் கொள்ளுங்கள். வண்டி, வாகனம் வாங்கும் யோகம் இருக்கின்றது.

மீனம் ராசியினருக்கு இந்த 2019-ம் வருடம் முழுவதும் முக்கியமான கிரகங்கள் சாதகமாக இருப்பதால் அதிர்ஷ்டம் கைக்கொடுக்கும் என்றே சொல்லலாம்.

உத்யோகஸ்தர்களுக்கு:

பணியிடத்தில் உங்களது செல்வாக்கு உயரும். உழைப்புக்கு ஏற்ற அங்கீகாரம் கொடுப்பர். அரசு துறையில் இருக்கின்றவர்களுக்கு விரும்பிய இடமாற்றம் கிடைக்கும். சக ஊழியர்கள் ஒத்துழைப்பு கிடைக்கும். தனியார் துறையில் இருக்கின்றவர்களுக்கு பதவிகளும், புதிய பொறுப்புகளும் கொடுக்கப்படும். இளைய பருவத்தினருக்கு நல்ல சம்பளத்துடன் கூடிய வேலை அமையக்கூடும். அலுவலகத்தில் உங்களுக்கு தொல்லையாக இருந்த அனைத்து விஷயங்களும் இப்பொழுது விலகி விடும்.

பேச்சை தொழிலாக கொண்டவர்களுக்கு நல்ல வருமானம் வரக்கூடும். ஆசிரியர் பணி, விற்பனை பிரிவில் உள்ளவர்கள், ரியல் எஸ்டேட், கவுன்சிலிங், ஆலோசனை சொல்பவர்கள், ஊடகத்துறை, மேடை பேச்சாளர்கள், மார்க்கெட்டிங் துறையில் இருக்கின்றவர்களுக்கு நற்பலன்கள் உண்டாகும். சிலர் திடீரென்று பிரபலம் அடைவார்கள்.

வியாபாரம்/தொழிற்பிரிவினர்:

தொழிலில், வியாபாரத்தில் நல்ல வளர்ச்சி ஏற்படக்கூடும். கண்மூடிக் கண் திறப்பதற்குள் எப்படி பணம் வந்தது என்று சொல்ல முடியாத அளவிற்கு வருமானம் வரக்கூடும். சுயதொழில், சிறுதொழிலில் மந்தமாக நடைபெற்ற வியாபாரம் சூடு பிடிக்க தொடங்கும். வெளிநாட்டு ஏற்றுமதி இறக்குமதி வியாபாரம் செய்கின்றவர்களுக்கு நல்ல லாபம் வரக்கூடும்.

பெண்களுக்கு:

மீனம் ராசி பெண்களுக்கு இல்லத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும். உறவினர்கள் இடையே இருந்து வந்த கருத்து மோதல்கள் மறைந்து ஒற்றுமை புலப்படும். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். மனதிற்கு பிடித்தமான வரன் அமையக்கூடும். நீண்ட நாட்களாக குழந்தை பாக்கியம் எதிர்பார்த்து கொண்டு இருப்பவர்களுக்கு நல்ல மழலை செல்வம் கிட்டும். உங்களது பிள்ளைகளுக்கு எடுக்கின்ற முயற்சிகள் நல்ல விதமாக முடிவடையும். பிள்ளைகளால் பெருமை உண்டு. ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். இல்லத்தில் இருப்பவர்களுடன் புனித யாத்திரைகள் மேற்கொள்வீர்கள்.

உடல் நிலை

கொழுப்பு சம்மந்தமான உணவுகளை தவிர்த்திடுங்கள். உஷ்ணம் சம்மந்தமான உபாதைகள், தோல் பிரச்சனை, அலர்ஜி, சைனஸ், யூரினரி இனபெக்ஷன் தோன்றக்கூடும் என்பதால் உடல் நலனில் அக்கறை எடுத்துக் கொள்ளுங்கள்.

மாணவமாணவியர்களுக்கு:

ஒன்பதாம் இடத்தில் இருக்கின்ற குருவால் மீனம் ராசி மாணவ – மாணவிகள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். ஆசிரியர்களிடம் நன்மதிப்பு பெறுவீர்கள். போட்டி தேர்வுகளில், நீட் தேர்வுகளில் நல்ல மதிப்பெண் பெறுவீர்கள். விரும்பிய பாடப்பிரிவு கிடைக்கும். குரு அதிசாரம் பெற்று தனுசு ராசியில் இருக்கின்ற காலத்தில் மட்டும் சிரத்தை எடுத்து படிக்க வேண்டும். தேவையற்ற விஷயங்களில் கவனத்தை செலுத்தாமல் படிப்பில் முழு முயற்சியுடன் படித்தால் நல்ல மதிப்பெண் பெறலாம். வெளிநாடு சென்று படிக்கும் வாய்ப்பை பெறுவர் .

பரிகாரம்:

வியாழக்கிழமையன்று அருகில் இருக்கும் கோயிலில் தட்சிணாமூர்த்தியை வழிபட்டு வாருங்கள். மேலும், சுப காரியத் தடைகள் அகல குலதெய்வ பிரார்த்தனைகள் மேற்கொள்ளுங்கள்.

Continue Reading
To Top