முன்னோர்களின் பாவம் போக்கும் ஏகாதசி விரதம்…

சுக்குக்கு மிஞ்சிய மருந்தில்லை.. காயத்ரிக்கு மிஞ்சிய மந்திரமில்லை, ஏகாதசிக்கு மிஞ்சிய விரதமில்லை என்பது ஆன்றோர் வாக்கு. அசுவமேத யாகம் செய்த பலன் கிடைக்கும். மாதத்திற்கு இரண்டு என வரும் ஏகாதசியில் விரதமிருந்தால் கிடைக்கும் நன்மைகள் ஏராளம்.. ஏகாதசி விரதம் எவ்வாறு தோன்றியதென பார்க்கலாம்…

முன்பொரு முறை வைகானஸர் என்ற மன்னன் வாழ்ந்து வந்தார். குடிமக்களுக்குக் குறையேதும் இல்லாத ஆட்சியை செய்து வந்தார். மக்கள் மகிழ்ச்சியில் மன்னனும் மனம் மகிழ்ந்து மிக்க கவனமுடன் ஆட்சி செய்து வந்தான். மனிதனாய் பிறந்தவன் மனக்கவலை இன்றி இருப்பது கடவுளுக்கே பொறுக்கவில்லை போலும்!! ஒருநாள் இரவு. மன்னர் ஒரு கனவு கண்டார். அக்கனவு, அவரை பெரும் மனக்குழப்பத்திலும், மனக்கவலைகளிலும் ஆழ்த்தியது. பொழுது விடிய காத்திருந்தார். பொழுது விடிந்ததும் வேதத்தில் கரை கண்டவர்களை அழைத்தார். வேத பண்டிதர்களே! நேற்றிரவு நான் ஒரு கெட்ட கனவு கண்டேன். என் முன்னோர்கள் நரகத்தில் விழுந்து துயரப்படுகிறார்கள். என்னைப் பார்த்து, ‘மகனே! நாங்கள் படும் துயரம் உன் கண்ணில் படவில்லையா? இந்த நரகத்திலிருந்து எங்களை விடுவிக்க ஏதாவது வழி செய்ய மாட்டாயா?’ எனக் கதறி அழுதார்கள். இதற்கு என்ன அர்த்தம்? நான் என்ன செய்ய வேண்டும் என்பதை நீங்கள்தான் சொல்ல வேண்டும்” என கேட்டார் மன்னர்.

”மன்னா! பர்வதர் என்று ஒரு முனிவர் இருக்கிறார். உன் முன்னோர்கள் ஏன் நரகத்தில் இருக்கிறார்கள்? அவர்களை எப்படிக் கரையேற்றுவது என்பதெல்லாம் அவருக்குத்தான் தெரியும். அவரிடம் போ!” என வழி காட்டினார்கள். மன்னர் உடனே பர்வத முனிவரைத் தேடிப்போனார். அவரிடம், தான் கண்ட கனவைச் சொல்லி, தன் வருத்தத்தை நீக்குமாறு வேண்டினார். உடன் கண்களை மூடி சிறிது நேரம் தியானித்த பர்வத முனிவர் பின் கண்களைத் திறந்து, எதிரில் கை கூப்பி நின்றிருந்த மன்னரிடம் சொல்லத் தொடங்கினார்:

”வைகானஸா! உன் தந்தை, அரசன் என்ற பதவி போதையில் மனைவியை அலட்சியம் செய்தான். ‘இல்லற தர்மத்தில் ஈடுபடுபவர்கள், நல்ல பிள்ளை பிறக்க வேண்டும் என்பதற்காக மனைவியுடன் சேர வேண்டிய காலங்களில் சேர வேண்டும்’ என்பதை மறந்தான். அந்தப் பாவம்தான் அவனுக்கு நரகம் கிடைத்திருக்கிறது.’ ”நீ உன் மனைவி மக்களுடன், ஏகாதசி விரதத்தை முறைப்படி கடைப்பிடித்து, பகவானை பூஜை செய்! அதன் பலனை உன் முன்னோர்களுக்கு அர்ப்பணம் செய்! அவர்களுக்கு நரகத்தில் இருந்து விடுதலை கிடைக்கும்!” என்று சொன்னார் பர்வத முனிவர்.

வைகானஸனும் ஏகாதசி விரதமிருந்து, அதன் பலனை முன்னோர்களுக்கு அர்ப்பணித்தார். அதன் பலனாக அவன் முன்னோர்கள் நரகத்திலிருந்து விடுதலை பெற்று, மன்னருக்கும் அவர்தம் குடும்பத்தாருக்கும் ஆசி கூறினார்கள். அன்று முதல் வைகானஸன் ஏகாதசியைக் கடைப்பிடித்துச் சிறப்படைந்தார். , நமக்கு மட்டுமல்லாமல் நம் முன்னோர்களுக்கும் நற்கதி தரக் கூடிய ஏகாதசி இது.

ஏகாதசி விரதமிருக்கும் விதிமுறைதிகள்…

தசமி அன்றும், துவாதசி அன்றும் ஒரு வேளைதான் உணவு உண்ண வேண்டும். ஏகாதசி அன்று அதிகாலையிலேயே எழுந்து, காலைக்கடன் முடித்து குளித்து,ஏகாதசி விரதம்.வை முறைப்படி பூஜை செய்ய வேண்டும். முடிந்தவர்கள் தண்ணீர் கூட அருந்தாமல் விரதம் இருக்க வேண்டும். முடியாத பட்சத்தில் சுவாமிக்குப் பழங்களை நைவேத்தியம் செய்து விட்டு உண்ணலாம். ஏகாதசியன்று துளசியை பறிக்கக்கூடாது. முதல்நாளே பறித்து வைத்துக்கொள்ளவேண்டும். ஏகாதசி அன்று பகலில் தூங்கக் கூடாது. முடிந்தால் இரவில் பஜனை அல்லது மஹாவிஷ்ணுவின் கதைகளைக் கேட்பது முதலியவற்றில் ஈடுபட்டு கண்விழிக்க வேண்டும். சினிமா பார்த்தல், ஊர்சுற்றுவது கூடாது. கோபம், கலகம், காமம் முதலியவற்றை விட்டுவிட வேண்டும். துவாதசி அன்று காலையில் சுவாமியைப் பூஜை செய்தப்பிறகே உண்ண வேண்டும். ஓர் ஏழைக்காவது உணவு தந்து, அதன் பிறகே நாம் உண்பது நல்லது. ஏகாதசியன்று அகத்திக்கீரை, நெல்லிக்காய், சுண்டைக்காய் ஆகியவற்றை உண்பது நல்லது.

ஏகாதசியில் 25 வகைகள் உள்ளது. அவை, உற்பத்தி ஏகாதசி, மோட்ச ஏகாதசி, ஸபலா ஏகாதசி, புத்ரதா ஏகாதசி, ஷட்திலா ஏகாதசி, ஜயா ஏகாதசி, விஜயா ஏகாதசி, ஆமலகி ஏகாதசி, பாப மோசனிகா ஏகாதசி, காமதா ஏகாதசி, வரூதிநி ஏகாதசி, மோகினி ஏகாதசி, அபரா ஏகாதசி, நிர்ஜலா ஏகாதசி, யோகினி ஏகாதசி, சயினி ஏகாதசி, காமிகா ஏகாதசி, புத்ர(ஜா)தா ஏகாதசி, அஜா ஏகாதசி, பத்மநாபா ஏகாதசி, இந்திரா ஏகாதசி, பாபாங்குசா ஏகாதசி, ரமா ஏகாதசி, ப்ரபோதினி ஏகாதசி, கமலா ஏகாதசி என்பவையே 25 ஏகாதசிகளாகும்.

ஏகாதசி விரதமிருந்து நமது, நமது பிள்ளைகள் பாவம் மட்டுமல்லாமல் நமது முன்னோர்களின் பாவம் போக்குவோம்..

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.