மிதுனம் ராசி ராகு – கேது பெயர்ச்சி பலன்கள் 2019!

இந்த 2019 வருடம் திருக்கணிதம் முறைப்படி மார்ச் 6-ம் தேதி ராகு-கேது பெயர்ச்சி நடைபெற இருக்கின்றது. உங்கள் ராசிக்கு இரண்டாம் இடத்தில்  இருக்கின்ற ராகு பெயர்ச்சியாகி உங்கள் ராசியில் வந்து அமர போகின்றார். கேது பகவான் உங்கள் ராசிக்கு எட்டாம் இடத்தில் இருந்து பெயர்ச்சியாகி ஏழாம் இடத்திற்கு வர போகின்றார். இதுவரை இரண்டாம் இடத்தில் இருக்கின்ற ராகுவால் பொருள் இழப்பு, குடும்பத்தில் சிறு சிறு பிரச்சனைகளை சந்தித்து வந்து இருப்பீர்கள். எட்டாம் இடத்தில் இருக்கின்ற கேதுவால் உடல் உஷ்ண உபாதைகள், பித்தம், சளி தொந்தரவு, சோர்வு, செய்கின்ற வேலையில் திருப்தியின்மை சந்தித்து இருப்பீர்கள். இனி நடைபெற இருக்கின்ற ராகு-கேது பெயர்ச்சி என்ன பலன்களை தர போகின்றது என்பதை விரிவாக காணலாம்.

Mithunam ragu kethu peyarchi 2019

பொதுவான பலன்கள்:

ஜென்மத்தில் ராகுவும், ஏழாம் இடத்தில் இருக்கின்ற கேதுவால் புது மாற்றங்களும், முன்னேற்றமும் ஏற்படக்கூடும். எட்டாம் இடத்தில்  இருக்கின்ற கேதுவை விட ஏழாம் இடத்தில் இருக்கின்ற கேதுவால் எவ்வித பாதிப்புகளும் உண்டாகாது. கேது சனியோடு இணைந்து தனுசு ராசியில் சஞ்சரிக்க போகின்றார். தனுசு குருவின் வீடு என்பதால் எவ்வித தீய பலன்களும் நடைபெறாது. ஜென்மத்தில் இருக்கின்ற ராகுவால் பெற்றோர் மற்றும் மூத்தவர்களின் ஆசியும், ஆலோசனையும் கிடைக்கும்.

ராகுவை போல கொடுப்பவர் எவரும் இல்லை என்ற பழமொழிக்குக்கேற்ப உங்களுக்கு எண்ணற்ற  நற்பலன்கள் கிடைக்கப் போகின்றது. வருகின்ற வாய்ப்புகளை தட்டிக்கழிக்காமல், அதனை சமயோஜித புத்தியால் பயன்படுத்தி கொள்ள வேண்டும். எடுக்கின்ற முயற்சிகளில் தடைகளும், தாமதமும் ஏற்பட்டாலும் அதனை பெரிதுபடுத்தாமல் விடாமுயற்சியுடன் செயல்பட்டால் வெற்றி நிச்சியம். சப்தம ஸ்தானத்தில் இருக்கின்ற கேதுவால் செலவுகள் அதிகரிக்கும். இதுவரை பல முறை கைநழுவி சென்ற காரியங்கள் இப்பொழுது கைக்கூடி வரக்கூடும். உற்றார், உறவினர்கள் இடையே சண்டை, சச்சரவு தோன்றக்கூடும் என்பதால் அனுசரித்து செல்லுங்கள். வீண் விவாதங்களை தவிர்த்திடுங்கள். முடிந்த அளவிற்கு நிதானமுடன், பொறுமையுடன் செயல்பட வேண்டும். பேச்சில் கவனம் தேவை. உங்களது பிள்ளைகளின் கல்வி , வெளிநாடு வேலை விஷயமாக அல்லது ஏதேனும் ஒரு காரியத்திற்காக பெரும் தொகை செலவு செய்ய நேரிடும். சொத்து சம்மந்தமான பிரச்சனைகள் தலைத் தூக்கம். தேவையற்ற விஷயங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. சிலருக்கு கடன் சுமை அல்லது புதிய கடன் வாங்க நேரிடும்.

உத்தியோகஸ்தர்களுக்கு :

பணியிடத்தில் உங்களது செல்வாக்கு உயரும். எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். வேலை விஷயமாக இடமாற்றம், ஊர்மாற்றம் ஏற்பட்டு இருந்தவர்கள் மீண்டும் இல்லத்தில் இருப்பவர்களுடன் ஒன்று சேர்வார்கள். குருவின் அதிசார காலங்களில் மட்டும் வேலைச்சுமை அதிகரிக்கும்.

வியாபாரம்/தொழில் பிரிவினர்கள்:

வியாபாரம் மற்றும் சொந்தமாக தொழில் செய்கின்றவர்கள் அதிகமாக உழைக்க வேண்டிய சூழல் உருவாகும். பண விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். முக்கியமான பொறுப்புகளை யாரையும் நம்பி ஒப்படைக்காமல் உங்களது மேற்பார்வையில் வைத்து செய்வது நல்லது. குரு சாதகமாக இருப்பதால் மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். புதிய தொழில் நல்ல முன்னேற்றத்தை கொடுக்கும். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். ஆண்டின் தொடக்கத்தை விட ஆண்டின் பிற்பகுதியில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பயணங்களில் அலைச்சல் இருந்தாலும், பயணங்களால் ஆதாயம் உண்டாகும். தொழில், வியாபாரம் விஷயமாக வெளியூர், வெளிமாநிலம் செல்ல நேரிடும்.

மாணவ – மாணவியர்கள்:

மிதுனம் ராசி மாணவர்கள் கல்வியில் எதிர்பார்த்த முன்னேற்றம் அடைவார்கள். குருவின் அதிசார காலங்களில் மட்டும் சிரத்தை எடுத்து படிக்க வேண்டும். வெளிநாடு சென்று படிக்கும் யோகம் இருக்கின்றது.

குடும்பம்:

இல்லத்தில் இருப்பவர்களுடன் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். பிள்ளைகளால் பெருமையும், செலவும் உண்டு. அக்கம், பக்கத்தினர் வகையால்  மனக்கசப்பான சம்பவங்கள் நிகழக்கூடும் என்பதால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மிதுனம் ராசி பெண்களுக்கு பொன், பொருள் சேர்க்கை உண்டு. புகுந்த வீட்டில் நற்பெயர் கிடைக்கும். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். திருமணம் ஆகாத இருபாலர்களுக்கும் நல்ல வரன் அமையக்கூடும்.

உடல்நலம்:

உடல் நலம் சீராக இருக்கக்கூடும். இதுவரை இருந்த வந்த சிறு சிறு உபாதைகள் கூட தகுந்த சிகிச்சை பிறகு சரியாகி விடும்.

வணங்க வேண்டிய தெய்வம்: ராகு பகவான் உங்கள் ராசியில் அமர்வதால் நவகிரஹங்களில் இருக்கின்ற ராகுவிற்கு அர்ச்சனை செய்யுங்கள் . மேலும் இல்லத்தில் நல்லவை நடைபெற, சுபகாரியத் தடைகள் விலக துர்க்கை அம்மனை ராகு காலத்தில் விளக்கேற்றி வழிபட்டு வாருங்கள்.