மருத்துவ குணம் நிறைந்த கறிவேப்பிலை குழம்பு

கறிவேப்பிலைக்கென்று தனியான வாசனை உண்டு. சாம்பார், குழம்பு, இரசம் என நாம் சாப்பிடும் அனைத்து உணவிலும் கறிவேப்பிலை சேர்க்கப்படுகின்றது. இதனால், உணவு மணமாக சுவையாக இருக்கும்.  கறிவேப்பிலை இலைகளே அதிக மருத்துவப் பயன் கொண்டவை. இலேசான காரச் சுவையும், வெப்பத் தன்மையும் கொண்டவை. மருந்தாகச் சாப்பிட்டுவர, பசியை அதிகமாக்கும், உடலை வலுவாக்கும், குடல் வாயுவை வெளியேற்றும். மேலும், இது பிரசவித்த பெண்களுக்கு கொடுக்கும் பத்தியக் குழம்பு. 

தேவையான பொருட்கள் :

கறிவேப்பிலை- கைப்பிடி அளவு, 

கடலைப்பருப்பு – ஒரு டீஸ்பூன், 

மிளகு 10, 

காய்ந்த மிளகாய் 2, 

உளுத்தம்பருப்பு ஒரு டீஸ்பூன், 

துவரம்பருப்பு ஒரு டீஸ்பூன், 

புளி ஒரு நெல்லிக்காய் அளவு, 

சீரகம் ஒரு டீஸ்பூன், 

கடுகு அரை டீஸ்பூன், 

நல்ல எண்ணெய் – 100 மி..லி

பூண்டு – 20பல்

உப்பு – தேவையான அளவு

செய்முறை: கடாயில் சிறிது எண்ணெய் விட்டு மிளகு, கடலைப்பருப்பு, சீரகம், துவரம்பருப்பு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய் ஆகியவற்றை வறுத்துக் கொள்ளவும். கறிவேப்பிலையை தனியாக வதக்கவும். பிறகு, எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்து, புளி சேர்த்து மிக்ஸியில் அரைத்து, உப்பு சேர்த்து, சிறிது தண்ணீர் கலந்து கொள்ளவும். மீதமிருக்கும் எண்ணெயை கடாயில் விட்டு கடுகு தாளித்து, பூண்டினை போட்டு வதக்கி, அரைத்து வைத்திருக்கும் கலவையைப் போட்டுக் கொதிக்கவிட்டு இறக்கவும் . காய்ச்சலின்போது ருசி தெரியாமல் இருக்கும் நாவின் சுவையை மீட்டெடுக்க இந்த குழம்பு உதவும். பிரசவித்திருக்கும் தாய்மார்களுக்கு இந்த குழம்பை கொடுக்க உடல் பலம் கூடும்.