கோடையை வரவேற்போம் – கோடைக்கால டிப்ஸ்

கோடைக்காலம் தொடங்கியாகிவிட்டது. ஆரம்பத்திலேயே சுள்ளென சுட்டெரிக்க ஆரம்பித்து விட்டார் மிஸ்டர்.வெயிலார். ஸ்ஸ்ஸ் அபா! ஏண்டா இந்த வெயில்காலம் வருதுன்னு அங்கலாய்ப்போர் பலர். 10ரூபாய்க்கு தண்ணீர் வாங்கி தாகத்தினை மனிதர்கள் தணித்துக்கொள்ள, கால்நடைகள் படும்பாடு சொல்லி மாளாது. அதனால் முடிந்தவரை மாடிகளில் வீணாய் தூக்கி எறியும் பிளாஸ்டிக் டப்பாக்களில் நீர் நிரப்பி வைங்க பறவைகள் குடிக்கட்டும். வீட்டுக்கு வெளியில் பழைய பெயிண்ட் டப்பா மாதிரியான ஒரு பெரிய பாத்திரத்தில் தினமும் ஒரு குடம் தண்ணி ஊத்தி வைங்க. ஆடு, மாடு, நாய்ன்னு குடிச்சு தாகம் தீரட்டும். பாத்திரம் கழுவும் தண்ணி, துணி துவைக்கும் தண்ணிகளை சிரமம் பாராமல் செடிகளுக்கு ஊத்துங்க. அதுங்களும் பொழைச்சு போகட்டும்!!

இனி கோடையிலிருந்து நம்மை தற்காத்துக்கொள்ளும் வழியினை பார்க்கலாம்.

வெந்தயத்தை மோரில் ஊற வைத்து தினமும் காலை சாப்பிட்டு வந்தால் கோடையில் வயிறு  குளு குளுவென்றிருக்கும். கோடையில் ஏற்படும் சூட்டு சம்பந்தமான நோய்கள் அண்டாது.

* தாழம்பூ எசன்ஸ் கடைகளில் விற்கும். வாரம் இருமுறை ஒரு ஸ்பூன் வீதம் குடித்தால் வயிறு குளிரும். கோடை நோய் முக்கியமாக அம்மை நோய் வராது.

* மோரில் 2 ஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு தினமும் காலை – மாலை குடித்து வாருங்கள். நீர்க்கடுப்பு ஏற்படாது.

* வெயிலுக்கு ஜில் தண்ணி என்று பிரிட்ஜ் வாட்டரை குடித்துக்கொண்டே இருப்பதை பார்த்திருப்போம். பிரிட்ஜ் வாட்டர் சிலருக்கு ஒத்துக் கொள்ளாமலும், சிலருக்கு நீர்க்கடுப்பு வரும். ஒத்துக் கொள்ளாதவர்கள் பானைத் தண்ணீர் அருந்தலாமே. அதில் சில வெட்டி வேரை போட்டு வைத்தால் ஜீரண சக்தி அதிகரிக்கும். நீரும் வாசமாய் இருக்கும்.

* முதல் நாளே சீரகத்தை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து ஆற வைத்து அருந்தினால் வெயில் கொடுமையிலிருந்து விடுபடலாம்.

* கற்பூரவல்லி வாழைப்பழத்தை பால் விட்டு ஜூஸ் போல செய்து சாப்பிட்டால் வயிறு குளிரும்.

* பொன்னாங்கண்ணிக்கீரை குளிர்ச்சி தரக்கூடியது. அதை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்.

* நுங்கு ஜூஸ் போட்டு குடித்தால் வயிறு குளிர்ந்திருக்கும்.

* ஊறுகாய், எண்ணெய், காரம், புளி, மாங்காய் இவற்றை அளவோடு சாப்பிட்டால் உஷ்ணத்திலிருந்து கொஞ்சம் தப்பிக்கலாம்.

* முள்ளங்கி, வாழைத்தண்டு, வெங்காயம், இவற்றை உணவில் அடிக்கடி சேர்த்துக்கொள்ள உஷ்ணம் தணியும். 

* தினமும் இருவேளை குளிங்க, அடர் நிறங்களாலான உடைகள் அணிவதை தவிருங்க! வெளியில் செல்லும்போது குடை, தொப்பி எடுத்து செல்ல மறக்காதீங்க. முடிந்தவரை மதியம் 12 முதல் மாலை 4 மணிவரை வெளியில் செல்வதை தவிருங்கள். பருத்தி ஆடைகளை அணியுங்கள். ஏசியிலேயே வேலை செய்யும் சூழலில் இருப்பவர். சிலமணிநேரங்களுக்கு ஒருமுறை வெளிகாற்றை சுவாசித்து காலாற நடந்து வாங்க…

சின்ன சின்ன விசயங்களில் கவனம் செலுத்தி கோடையை பழிக்காமல் வரவேற்போம்!!