காரடையான் நோன்பு இருக்கும் முறை

fdacac4f1fef83a2846228bf9b205ae0-1

இதற்கு நைவேத்தியம் காரரிசி மாவும், காராமணி அல்லது துவரையும் கலந்த அடை என்னும் பணியாரம். இதனால்தான் காரடையான் நோன்பு என்பார்கள். காட்டில் உயிர் பெற்று எழுந்த சத்தியவானுடன் சாவித்திரி அக்காட்டிலேயே நோன்பு அனுஷ்டித்து அங்குள்ள மரப்பட்டைகளின் சிறு இழைகளை நூலாக்கிச் சரடாக அணிந்து கொண்டாள். பழங்களையும் காட்டில் கிடைத்த துவரையையும் கொண்டு செய்த அடையையும் தேவிக்கு நிவேதனம் செய்வித்தாள்.

விரதம் இருக்கும் முறை..

விரத தினத்தன்று அதிகாலையில் எழுந்து குளித்து புத்தாடை அணிந்து, வீட்டை சுத்தம் செய்து, பூஜை செய்யும் இடத்தை நன்கு மெழுகிக் கோலமிட்டு ஒரு கலசத்தின் மேல், தேங்காய், மாவிலை வைக்க வேண்டும். கலசத்தில் குங்குமம், மஞ்சள் பூசி, அதன்மேல் மஞ்சள் கயிறை கட்ட வேண்டும். அருகில் காமாட்சி அம்மன் படம் வைத்து, அவளை சாவித்திரியாக கருதி வழிபட வேண்டும். சாவித்திரி காட்டில் தன் கணவன் சத்தியவானுடன் வாழ்ந்த போது, அங்கு கிடைத்த செந்நெல்லையும், காராமணியையும் கொண்டு அடை தயார் செய்து, வெண்ணெயுடன் அன்னைக்கு சமர்ப்பித்து வழிபட்டாள். அதனால் சிறிது வெண்ணெயுடன், விளைந்த நெல்லைக் குத்தி கிடைத்த அரிசி மாவில் அடை தயாரித்து நைவேத்தியமாக படைக்க வேண்டும். நுனி வாழை இலையில் வெற்றிலைப்பாக்கு, மஞ்சள், வாழைப்பழம், தேங்காய் உள்ளிட்ட பொருட்களை ஒரு தட்டில் வைக்க வேண்டும். மஞ்சள் சரடு (மஞ்சள், பூ இதழும் நடுவில் கட்டி) இவைகளை வைத்து இலை நடுவில் வெல்ல அடையும், வெண்ணையும் வைக்க வேண்டும். அம்பாள் படத்தில் சரடை அணிவித்தபின் இளைய வயதுப் பெண்மணிகளுக்கு முதிய சுமங்கலிகள் சரடு கட்ட வேண்டும்.பிறகு தானும் கட்டிக்கொண்டு அம்பிகையை நமஸ்கரிக்க வேண்டும். அப்போது “உருகாத வெண்ணெய்யும் ஓரடையும் நோற்றேனே. ஒருக்காலும் என் கணவர் என்னைப் பிரியாதிருக்க வேணும்’ என்று வேண்டிக் கொள்ளனும். அதுமட்டுமல்ல, மாசி முடிவதற்குள் சரடு கட்டிக்கொள்ள வேண்டும். பூஜை தொடங்கி முடியும்வரை விளக்கு எரிந்துக்கொண்டிருக்க வேண்டியது அவசியம்.

f781df7c2c244f73299b34aebfeae662

சில அடைகளை வைத்திருந்து மறுநாள் காலை அவற்றை பசு மாட்டிற்குக் கொடுக்க வேண்டியதும் அவசியம். அடைகளைப் படைக்க வாழை இலை கிடைக்காவிடில் பலா இலைகளைச் சேர்த்து முடைந்து அதில் படைப்பது மிகவும் விசேஷமாகச் சொல்லப்படுகிறது. பூஜையை முடிக்கும் வரை பெண்கள் எதையும் உண்ணாமல் இருக்க வேண்டும். முடியாதவர்கள் சிறிதளவு பழம் ஏதேனும் சாப்பிடலாம். ஆனால் மோர், தயிர், பால் என்று எதையும் உட்கொள்ளக் கூடாது. ஏனைய பிற நோன்புகளுக்கு கையில் சரடு கட்டிக்கொள்வது வழக்கமாயிருக்க இந்தக் காரடையான் நோன்பிற்கு மட்டும் சரட்டில் மஞ்சள் சேர்த்து கழுத்தில் கட்டிக்கொள்வார்கள். சிலர் மஞ்சள் சேர்க்காமல் மஞ்சள் சரடாய் படைத்து தாலிக்கொடியில் கட்டிக்கொள்வதும் உண்டு.

இந்த வருடத்துக்கான காரடையான் நோன்பு 15/3/2019 வெள்ளிக்கிழமையன்று வருகின்றது.

தீர்க்க சுமங்கலி பவ!

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.