நாளை முதல் லாக்டவுன் தளர்வு: அண்ணா பல்கலை முக்கிய அறிவிப்பு

கொரோனா வைரஸ் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் தமிழகம் உள்பட நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது என்பது தெரிந்ததே. குறிப்பாக சென்னை உள்ளிட்ட ஒருசில மாவட்டங்களில் மட்டும் கடந்த சில நாட்களாக முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளதால் அனைத்து கடைகளும் நிபந்தனையுடன் தான் திறக்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் நாளை முதல் சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் ஊரடங்கு தளர்வு என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை கடைகள் திறந்திருக்கும் என்று பல்வேறு நிபந்தனைகள் தளர்த்தபட்டதாக தமிழக அரசு சமீபத்தில் அறிவித்தது

இந்த நிலையில் சென்னையில் முழு ஊரடங்கு காரணமாக கடந்த சில நாட்களாக செயல் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது. ஆனால் நாளை முதல் ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளதால் அண்ணா பல்கலைக்கழகம் நாளை முதல் செயல்படும் என்று பல்கலைக்கழக பதிவாளர் அறிவித்துள்ளார்

எனவே நாளை முதல் அண்ணா பல்கலைக்கழக ஊழியர்கள் அனைவரும் அலுவலகத்திற்கு பணிக்கு வர வேண்டும் என்றும் பணிக்கு வராதவர்கள் விடுமுறை எடுத்துக் கொண்டதாக கருதப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

ஊரடங்கு தளர்வு ஏற்பட்டாலும் பேருந்து உள்பட வாகனப் போக்குவரத்து வசதி இல்லாததால் பணிக்கு எப்படி வரமுடியும் என்ற கேள்வி ஊழியர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இருப்பினும் இதனை கருத்தில் கொள்ளாமல் அண்ணா பல்கலைக்கழகம் கண்டிப்பாக பணிக்கு வரவேண்டும் என அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது