சொந்த மண்ணில் இறுதிப்போட்டிக்குள் நுழைந்த இங்கிலாந்து

பர்மிங்காம்:

12-வது உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் பர்மிங்காமில் நேற்று அரங்கேறிய 2-வது அரைஇறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி, இங்கிலாந்துடன் களமிறங்கியது.

மோசமான தொடக்கம்:

‘டாஸ்’ ஜெயித்த ஆஸ்திரேலிய அணி முதலில் பேட் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக டேவிட் வார்னரும், கேப்டன் ஆரோன் பிஞ்சும் களமிறங்கினர்.

ஆரோன் பிஞ்ச் ரன் எதுவும் எடுக்காமல், எல்.பி.டபிள்யூ. ஆனார். வார்னர் 9 ரன்னில் ஸ்லிப்பில் நின்ற பேர்ஸ்டோவிடம் சிக்கினார். அடுத்து வந்த பீட்டர் ஹேன்ட்ஸ்கோம்ப்பும் 4 ரன்னில் ஆட்டமிழந்தார். அப்போது ஆஸ்திரேலிய அணி 14 ரன்னுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து பரிதவித்தது.

சொந்த மண்ணில் இறுதிப்போட்டிக்குள் நுழைந்த இங்கிலாந்து

பரிதவிக்கும் ஆஸ்திரேலிய அணி:

ஸ்டீவன் சுமித்தும், அலெக்ஸ் கேரியும் இணைந்து அணியை மோசமான நிலையில் இருந்து காப்பாற்றினர். அணியின் ஸ்கோர் 117 ரன்களாக உயர்ந்த போது அலெக்ஸ் கேரி 46 ரன்னில் கேட்ச் ஆனார்.

அடுத்து வந்த மார்கஸ் ஸ்டோனிசின் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தனர். இதனால் ஆஸ்திரேலியா மீண்டும் தடுமாற்றத்திற்கு உள்ளானது.

மேக்ஸ்வெல் 22 ரன்களில் கேட்ச் ஆனார். ஸ்டீவன் சுமித் 85 ரன்களில் ரன்-அவுட் ஆனார். முடிவில் ஆஸ்திரேலிய அணி 49 ஓவர்களில் 223 ரன்களுக்குள் வீழ்ந்தது.

இங்கிலாந்து வெற்றி:

அடுத்து 224 ரன்கள் என்ற இலக்கை நோக்கி இங்கிலாந்தின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜாசன் ராயும், பேர்ஸ்டோவும் களம் இறங்கினர். ஜாசன் ராய், சிக்சரை பறக்க விட்டு அதிரடியை ஆரம்பித்து வைத்தார்.

பேர்ஸ்டோ 34 ரன்களில் எல்.பி.டபிள்யூ. ஆனார். டி.ஆர்.எஸ். முறைப்படி அப்பீல் செய்தும் பலன் இல்லை.

ஜாசன் ராய்க்கு நடந்த பரிதாபம்:

ஜாசன் ராய் 85 ரன்களில் லெக்சைடில் வீசிய எழும்பி சென்ற பந்தை அடிக்க முயற்சித்தார். அது பேட்டில் படவில்லை. ஆனால் அதை பிடித்த விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி முறையிட்டதும் நடுவர் தர்மசேனா விரலை உயர்த்தி விட்டார்.

இதனால் ஜாசன் ராய், பந்து பேட்டில் படவில்லை என்று நடுவரிடம் வாதிட்டார். ஆனாலும் அவர்களது டி.ஆர்.எஸ். வாய்ப்பு ஏற்கனவே பயன்படுத்தப்பட்டு விட்டதால் வேறு வழியின்றி நடையை கட்டினார். டி.வி. ரீப்ளேயில் பந்து பேட் அல்லது கையுறை எதிலும் உரசவில்லை என்பது தெளிவாக தெரிந்தது.

வெற்றி பெற்ற இங்கிலாந்து:

இங்கிலாந்து அணி 32.1 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 226 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. ஜோ ரூட் 49 ரன்களுடனும், மோர்கன் 45 ரன்களுடனும்  களத்தில் இருந்தனர்.