சொல்லும் அளவுக்கு ஒண்ணும் செய்யவில்லை-ஸ்டாலின்

தமிழகத்தில் பெயர் சொல்லும் அளவிற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி எந்தத் திட்டத்தையும் செய்யவில்லை என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் குற்றம் சாட்டி உள்ளார்.

திருவள்ளூர் மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் டாக்டர் ஜெயக்குமாரை ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பரப்புரையை மேற்கொண்டார். அப்போது, முதலமைச்சர் பழனிசாமி தனது பதவியைக் காப்பாற்றிக் கொள்ளவே பாஜகவோடு கூட்டணி அமைத்திருப்பதாக கூறினார். மேலும் தமிழகத்திற்கு பெயர் சொல்வது போல ஏதாவது ஒரு திட்டத்தை முதலமைச்சர் செய்ததுண்டா என்று ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். 

தொடர்ந்து அவர் பேசும் போது, அதிமுகவோடு கூட்டணி அமைவதற்கு முன்பு கழகங்களோடு கூட்டணி கிடையாது என்று எழுதித் தருகிறேன் என்று கூறிய டாக்டர் ராமதாஸ், ஒவ்வொரு வீடாகச் சென்று கதவைத் தட்டி கூட்டணி வைத்துக் கொண்டுள்ளார் என்று ஸ்டாலின் தெரிவித்தார். மேலும் உடல் நலம் சரியில்லாதவரைப் பார்க்கச் சென்று அதையும் பயன்படுத்தி அரசியல் பேரம் பேசப்பட்டது என்றும் அவர் கூறினார்.

முன்னதாக காக்களூர் என்ற இடத்தில் மு.க. ஸ்டாலின் பேசும்போது, தேர்தல் நெருங்கும் போது வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு  2 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்ற திட்டம் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் நிறுத்தப்பட்டுள்ளதாகக் கூறினார். ஆனால் அதனை திமுக தடுத்து நிறுத்தி விட்டது என்று பொய்யைக் கூறி வருவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.