Connect with us

அத்திவரதர் தரிசனம் கடந்து வந்த பாதை…

ஆன்மீகம்

அத்திவரதர் தரிசனம் கடந்து வந்த பாதை…

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் இருக்கும் அனந்தசரஸ் என்னும் புஷ்கரணியில் இருக்கும் நீராழி மண்டபத்தினுள் இருந்து 40 வருடங்களுக்கு ஒருமுறை வெளியில் எடுத்து, அருகிலிருக்கும் வசந்த மண்டபத்தில் 48 நாட்கள் பொதுமக்களின் தரிசனத்திற்காக வைப்பது வழக்கம்.

அதன்படி கடந்த ஜூலை 1 முதல் பொதுமக்கள் தரிசனத்திற்காக அத்திவரதர் வைக்கப்பட்டார். முதலில் சயனக்கோலத்திலும், பின்பு நின்ற கோலத்திலும் அத்திவரதர் அருள்பாலித்தார். குடியரசு தலைவர், துணை குடியரசு தலைவர், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, தமிழிசை சௌந்திரராஜன், எச்.ராஜா, கருணாநிதியின் மனைவி ராஜாத்தியம்மாள், துர்கா ஸ்டாலின், ரஜினிகாந்த், ஆர்.பார்த்தீபன், மனோபாலா, நயன்தாரா,அட்லீ உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் அத்திவரதரை தரிசித்தனர். தினத்துக்கு தலா 2 லட்சத்திற்கும் அதிகமானோர் வந்து தரிசித்தனர். மொத்தம் 47 நாட்கள் அத்திவரதரை 1கோடிக்கும் மேற்பட்டோர் தரிசித்து சென்றனர். உண்டியல் வசூல் 7கோடிக்கும் மேல் வசூல் ஆகியது.

20,000க்கும் மேற்பட்ட காவலர்களும், பல்லாயிரக்கணக்கான துப்புறவு தொழிலாளர்களும் சிறப்பாக சேவை ஆற்றினர். மூன்று இடங்களில் தற்காலிக பேருந்து நிலையங்களும், அங்கிருந்து கோவிலுக்கு செல்ல 25க்கும் மேற்பட்ட மினி பேருந்துகளும் இயக்கப்பட்டது. காஞ்சிபுரம் வழியாக செல்லும் அனைத்து ரயில்களும் காஞ்சிபுரத்தில் நின்று சென்றது. 20க்கும் மேற்பட்ட மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டது. ஆம்புலன்ஸ் வசதிகள், இருசக்கர ஆம்புலன்ஸ் என மருத்துவ துறையும் தங்களது கடமையை செய்தது. தற்காலிக குடிநீர் குழாய்கள், கழிப்பறைகள் அமைக்கப்பட்டது. அத்திவரதர் தரிசனத்திற்காக அரசு 29கோடி நிதி ஒதுக்கி காஞ்சிபுரத்தை தயார் செய்தார்கள்.

முதல் ஓரிரு வாரம் எல்லாமே சுமூகமாய் சென்று கொண்டிருந்தது. சமூக வலைத்தளங்களின் உதவியால் விசயம் பரவி, வெளிநாடுகளில் இருந்தும் மக்கள் காஞ்சிபுரம் நோக்கி வந்தனர். 50000 டூ 75000 வரை பக்தர்களை நிர்வாகம் எதிர்பார்த்திருக்க, தினத்துக்கு 2லட்சம் வரை வந்து குவிந்தனர். காஞ்சிபுரமே திணறியது. உணவு, குடிநீர் என மக்கள் தவித்தனர். சிற்சில அசம்பாவிதங்கள் நடந்தது. சில உயிரிழப்புகளும், நூற்றுக்கும் அதிகமானோர் மயங்கியும் விழுந்தனர். கூடுதல் வசதிகளை மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்தது. மக்கள் பலமணிநேரம் காத்திருந்து அத்திவரதரை தரிசித்தனர். குடிநீர், பிஸ்கட், குளிர்பானங்கள் பக்தர்களுக்கு வினியோகிக்கப்பட்டது. முதல்வர் அன்னதான திட்டத்தினை தொடங்கி வைத்தார்.

அத்திவரதரை காணமுடியாதவர்கள் வசதிக்காக,கூடுதலாய் சிலநாட்களை அத்திவரதரை வெளியில் வைத்திருக்க வேண்டி கோர்ட்டுகளில் மனுக்கள் சேர்ந்தன. முதலமைச்சருக்கும் கோரிக்கைகள் சென்றது. இது ஆன்மீக நிகழ்வு என்பதால் இதில் அரசோ கோர்ட்டோ தலையிடமுடியாது என சொல்லி கோவில் நிர்வாகத்திடம் பொறுப்பை ஒப்படைத்தனர். ஆகம விதிப்படி 48 வது நாள் அத்திவரதரை குளத்துக்குள் வைப்பது உறுதியென கோவில் நிர்வாகம் அறிவித்து ஆகஸ்ட் 17 வரை மட்டுமே தரிசனம் என அறிவித்தது.

ஆகம விதிகளை நிறைவேற்ற வேண்டி ஆகஸ்ட் 17 தேதியான இன்றைய தினத்துக்கான தரிசனம் ரத்து செய்யப்பட்டது. நேற்றைய தினம் மாலை 5 மணியோடு கோவில் கோபுர வாசல்கள் அடைக்கப்பட்டது. கோவிலுக்கு உள்ளிருக்கும் பக்தர்கள் மட்டும் இரவு முழுக்க தரிசனம் செய்விக்கப்பட்டு வெளியேற்றப்பட்டனர். இன்றைய தினம் பொதுமக்களுக்கோ அல்லது வி.ஐ.பிக்களுக்கோ தரிசனம் கிடையாது. குறிப்பிட்ட சில அர்ச்சகர்கள் மட்டுமே அத்திவரதரை குளத்துக்குள் வைக்கும் சடங்கில் இருப்பர் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. அத்திவரதர் தரிசனம் முடிவடைந்து காஞ்சிபுரமும், ஊர் பொதுமக்களும் இயல்பு நிலைக்கு திரும்ப ஓரிரு நாட்கள் ஆகும். ஏனென்றால் அத்திவரதர் காஞ்சிபுரம் மக்களின் உணர்வோடு ஒன்றிவிட்டார்.

காஞ்சிபுரம் மக்களோடு நாமும் அத்திவரதர் திரும்பி வரும் நாளுக்காக காத்திருப்போம்!!

Continue Reading

அதிகம் படித்தவை

To Top