நடிகர் முரளியின் பிறந்த நாள்- அதர்வா வாழ்த்து

தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோவாக ஒருகாலத்தில் வலம் வந்தவர் முரளி. இவர் கன்னட இயக்குனர் சித்தலிங்கையாவின் மகன் ஆவார். இவர் முதன் முதலில் நடிகராக அறிமுகம் ஆனது ஹெலுவினா ஹெஜ்ஜே என்ற கன்னட படம்.அதன் பிறகு தமிழில் 84ல் அமீர்ஜான் இயக்கத்தில் வந்த பூவிலங்கு படத்தில் அறிமுகமானார்.

அந்த படத்தில் ஆத்தாடி பாவாட காத்தாட என்ற பாடல் இவர் நடித்து புகழ்பெற்ற பாடலாக விளங்கியது. பின்பு இங்கேயும் ஒரு கங்கை உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

இவருக்கு முதன் முதலில் திருப்புமுனையாக அமைந்த படம் பகல் நிலவு. அதில் வித்தியாசமான இளைஞனாக முரட்டுத்தனம் நிறைந்தவராக நடித்திருந்தார். மணிரத்னம் தமிழில் இயக்கிய முதல் படம் இது.

இளையராஜாவின் குரல் முரளிக்குத்தான் ஆரம்ப காலத்தில் அதிகம் பொருந்தி வந்தது. ஆத்தாடி பாவாட, இப்படத்தில் இடம்பெற்ற பூமாலையே தோள் சேரவா போன்ற பாடல்கள் இன்று வரை புகழ்பெற்று விளங்குகிறது.

இதனாலேயே இளையராஜாவின் பாவலர் கிரியேசன்ஸ் இவரை வைத்து கீதாஞ்சலி படத்தை தயாரித்திருந்தது போலும். இப்படத்தில் இடம்பெற்ற ஒரு ஜீவன் அழைத்தது பாடலும் இளையராஜாவின் குரலில் மிக மிக அருமையாக பொருந்தி போனது.

அந்த காலங்களில் வெள்ளிவிழா நாயகன் மோகனின் படங்களில் மைக் பிடித்து பாடுவது போல கதை அமையும் அவரின் படங்களும் ஜெயிக்கும் அது போல் மோகனுக்கு அடுத்தபடியாக மைக் பிடித்து பாடியது இவராகத்தான் இருக்கும்.

இவரின் புதியவன்,புதுவசந்தம், இதயம்,ரோஜா மலரே,காலமெல்லாம் காதல் வாழ்க உள்ளிட்ட படங்களில் இவர் மைக் பிடித்து பாடும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

புதுவசந்தம் , இதயம் உள்ளிட்ட படங்கள் 90களில் மிகப்பெரிய திருப்பு முனையை கொடுத்தது. காதல் கோட்டை வெற்றியில் மூழ்கி இருந்த தயாரிப்பாளர் சிவசக்தி பாண்டியன் அடுத்ததாக முரளியை வைத்து தயாரித்த காலமெல்லாம் காதல் வாழ்க படம் வித்தியாசமான காதல் கதையாக 200 நாட்களை கடந்தது. பாலு இயக்கி இருந்தார்.

சிறந்த நடிப்புத்திறனை வெளிப்படுத்திய நடிகர் முரளியின் ஆன்மா கடந்த 2010ல் வந்த பாணா காத்தாடியோடு காற்றில் கலந்தது.

இதில் அவர் மகன் அதர்வாவோடு நடித்திருந்தார்.மறைந்தும் மக்கள் மனதில் வாழும் இன்று பிறந்த நாள் காணும் முரளிக்கு அவர் மகன் அதர்வா வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.