ஆற்றுக்கால் பகவதி அம்மன் பொங்கல் திருவிழா தொடங்கியது..

கேரளத்தை பரசுராமர் உருவாக்கினார் என நமக்கு தெரியும். அப்படி அவர் கேரளத்தினை உருவாக்கும்போது, 108 பராசக்தி கோவிலையும், 108 சிவன் கோவிலையும் உருவாக்கி வைத்தார். ஆனால், அந்த 108 பராசக்தி கோவில்களுக்கு தனித்தனி பெயராய் இல்லாமல் கோவில் அமைந்த ஊர்ப்பெயரோடு சேர்ந்து பகவதி அம்மன் கோவில் என அழைக்கப்படுகிறது. உதாரணத்திற்கு சோட்டாணிக்கரை பகவதி அம்மன் கோவில், ஆற்றுக்கால் பகவதி அம்மன் என அழைக்கப்படுகிறது.

536fd4ad4c0db4f7f967b18b1097c8d8

கேரள மாநிலத்தில், திருவனந்தபுரத்தில் ஆற்றுக்கால் பகவதி அம்மன் ஆலயத்தில் ஆண்டுதோறும் மலையாள மாதமான மகரம்-கும்பத்தில் கார்த்திகை நட்சத்திரத்தில் தொடங்கி பத்து நாட்கள் கொண்டாடப்படுகிறது. மாசி மாதத்தின் பூரம் நட்சத்திரமன்று பவுர்ணமி நாளில் நிகழும் பொங்கல் விழாவில் லட்சக்கணக்கான பெண்கள் கூடிப் பொங்கல் வைக்கின்றனர். இப்படி பொங்கல் வைக்க இரு கதைகள் சொல்லப்படுகிறது. இதில் முதல் கதை
கற்புக்கரசியான கண்ணகியின் கதையாகும். கோவலனின் படுகொலைக்கு பிறகு, கண்ணகி அரசவைக்கு சென்று நீதிக்கேட்டு, பின்பு,  மதுரை நகரைத் தீக்கிரையாக்கிய பின்பு, கொடுங்கல்லூர் செல்லும் வழியில், சிறிது காலம் ஆற்றுக்காலில் தவமிருந்து தங்கியிருந்ததாக சொல்லப்படுகிறது. இதற்குச் ஆதாரமாக, இக்கோயில் திருவிழாக் காலங்களில் பாடப்படும் “தோற்றம் பாடல்” கண்ணகி வரலாற்றை ஆதாரமாக சொல்லலாம். 

c1f73b2d7ac10d7e1dc3e9a43c822d6d

அடுத்த கதையாக, பராசக்தியின் பக்தர் ஒருவர், ’’கிள்ளி” என்ற ஆற்றில் நீராடிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு தெய்வீக அம்சம் பொருந்திய சிறுமி ஒருத்தி வந்தாள். அவளைப் பார்த்ததும் அந்த அன்னையே குழந்தை வடிவில் வந்திருப்பதாக எண்ணிய அந்த பக்தர் சிறுமியை கண்டு உருகி நின்றார்.  கருணைமிகுந்த சிரிப்புடன் அம்மனின் பக்தரைப் பார்த்த சிறுமி, ”என்னை ஆற்றின் மறுகரையில் கொண்டு போய்விட முடியுமா? என்று கேட்டாள். அவ்வாறே மறுகரையில்  கொண்டு போய் சேர்த்தார். ஆனால், சிறுமியை உடனே அனுப்ப பக்தரின் மனம் ஒப்புக்கொள்ளவில்லை. வீட்டிற்கு அழைத்துச் சென்று உபசரிக்க எண்ணினார். அதனை அந்த சிறுமியிடம் கூற எண்ணி திரும்பியபோது, அந்த இடத்தில் சிறுமி இல்லாதது கண்டு திகைத்தார். பின்னர் வந்தது அம்பிகை தான் என்பதை எண்ணி மகிழ்ந்தார். 

அன்று இரவு அந்த பக்தரின் கனவில் தோன்றிய அதே சிறுமி, ‘தென்னை மரங்கள் அடர்ந்த பகுதியில் 3 கோடுகள் தென்படும். அந்த இடத்தில் கோவில் அமைத்து, என்னை குடியேற்றுங்கள்’ என்று கூறினாள்.  மறுநாள் சிறுமி கனவில் சுட்டிக்காட்டிய இடத்திற்கு சென்ற பெரியவர், அங்கு 3 கோடுகள் இருப்பதை கண்டு ஆனந்தம் கொண்டார். அங்கு சிறிய கோவிலை கட்டி அம்மனை வழிபட்டார். நாளடைவில் இந்த கோவில் ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவிலாக எழுச்சியுற்றது எனச் சொல்லப்படுகிறது.

ca1142e7435b18456107f9018b885823

 

ஆற்றுக்கால் பகவதி அம்மன் இங்கு ஆதித் தாயாக வணங்கப்படுகிறாள். தமிழக, கேரளக் கட்டிடக் கலைகள் இணைந்து உருவானது இக்கோவில். இங்கு,  மகிஷாசுரமர்த்தினி, காளி, ராஜராஜேஸ்வரி, பார்வதி, சிவன்  ஆகிய முக்கியமான தெய்வங்களும் காட்சி தருகின்றனர். வடக்கிலும், தெற்கிலும் எளிய வடிவிலான ராஜகோபுரங்கள் சிற்பங்கள் நிறைந்து காணப்படுகின்றன. கன்னிமூலையில், கணபதி, நாகர் சன்னதிகள் உள்ளது. ஆலயத்தின் நடுவில், அன்னை பகவதி ஒளிவீசும் முகத்துடன் காட்சி தருகிறாள். அன்னையின் காலடியில் வேதாளம். அதற்கு முன்னதாக உற்சவமூர்த்தி ஜோதி வடிவாக ஒளிவீசும் காட்சி தருகிறாள். அன்னையின் இடதுபுறம் மாடன் தம்புரான் சன்னிதியும், அவரையொட்டி, ஓங்கி உயர்ந்த பனை மரமும் அமைந்துள்ளன. நான்கு திசைகளிலும் வாசல்கள் அமைக்கப்பட்டுள்ளன.  ஆற்றுக்கால் பகவதி 12 வயதுச் சிறுமியாக  வந்து முள்ளுவீட்டில் குடும்பத்தினரின் கனவில் தோன்றி ஆலயம் கட்டச் சொன்னதால் இந்த ஆலயத்தின் நிர்வாகத்தை, ‘முள்ளு வீடு’ குடும்பத்தினர் கவனித்து வந்தனர். 1970 முதல் ஆற்றுக்கால் பகவதி கோவில் அறக்கட்டளை மூலமாக நிர்வாகம் செய்யப்பட்டு வருகிறது. 

விரதமிருந்து இருமுடி கட்டி சபரி மலைக்கு ஆண்கள் செல்வது போல, கேரள மற்றும் கேரள தமிழக எல்லை வாழ் பெண்கள் மாலை அணிந்து விரதமிருந்து இருமுடி கட்டி இக்கோவிலுக்கு செல்கின்றனர். அதனால் இக்கோவில் பெண்களின் சபரிமலைன்னு பெயர் பெற்றது. கேரளத்து மக்கள் பகவதி அம்மனை தங்கள் தாயாக பாவித்து தங்கள் இல்லத்து விசேசத்துக்கு அம்மனுக்கு முதல் மரியாதை செய்கிறார்கள். ஆதிசங்கரர் இத்தலத்தில் ஸ்ரீ சக்கர யந்திரம் பிரதிஷ்டை செய்து வணங்கினார். அவருக்குப்பின், வித்யாதிராஜ சட்டம்பி  சுவாமிகள் இத்தலத்தில் வெகுகாலம் தங்கி பூஜை செய்துள்ளார்.

 

அம்மனே பொங்கலிடும் அதிசயம்..

கேரளம் மட்டுமின்றி, தமிழகம் மற்றும் பல மாநிலங்களில் இருந்து பெண்கள் இங்கு வந்து பொங்கல் வைத்து அம்மனை வழிபடுகின்றனர். மாசி மாதம் பூர நட்சத்திரமும், பவுர்ணமியும் கூடும் நாளன்று இந்த பொங்கல் விழா நடைபெறுகிறது. பொங்கல் விழாவின் போது திருவனந்தபுரமே புகை மூட்டமாகத்தான் காட்சியளிக்கும். ஆண்கள் அனுமதிக்கப்படாத இந்த பொங்கல் விழாவில் பெண்கள் மட்டுமே கலந்துகொள்வார்கள். பொங்கல் வைக்கும் பெண்களின் ஊடே, பகவதி அம்மனும் ஒரு பெண் வடிவில் பொங்கல் வைப்பதாக இன்றளவும் பக்தர்களால் நம்பப்படுகிறது. மாலையில் கோவில் பூசாரிகள் ஆங்காங்கே இருக்கும் அனைத்து பொங்கல் பானைகளிலும் தீர்த்தம் தெளிப்பார்கள்.  அப்போது வானத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலமாக பூ தூவப்படும். இந்த நிகழ்ச்சியின் போது கோவில் உள்ளேயும் பகவதிக்கு பொங்கல் விடுகிறார்கள். அந்த அடுப்பிற்கு ‘பண்டார அடுப்பு’ என்று பெயர்.  கருவறையில் உள்ள விளக்கில் இருந்து தீ எடுத்து வந்தே, ‘பண்டார அடுப்பு’ பற்ற வைக்கிறார்கள். இந்த அடுப்பில் இருந்து செய்யப்பட்ட பொங்கலே அம்மனுக்கு நிவேதனம் செய்யப்படுகிறது.

மொத்தம் பத்து நாட்கள் நடைப்பெறும் இவ்விழாவின் ஒன்பதாவது நாள் பொங்கல் விடும் வைபவம் நடக்கும். அன்று காலையில் சிறுமிகள் தங்களை அலங்கரித்த நிலையில் அம்மன் சன்னிதானத்தை நோக்கி குடும்பத்துடன் வந்து அம்மனை பூஜித்துத் திரும்புவார்கள். இதை ‘தாலப்பொலி‘ என்கிறார்கள். எல்லா சிறுமிகளும் புத்தாடை அணிந்து தலையில் மலர்க்கிரீடம் சூடி கையில் தாம்பாளம் ஏந்தி அதில் அம்மனுக்கு பூஜைக்குரிய பொருட்கள் வைத்து சிறு தீபம் எற்றிக்கொண்டு வருவார்கள். சிறுமிகளுடன் அவர்களது பெற்றோர் உறவினர்களும் வருவார்கள். இப்படி செய்வதால், அந்த சிறுமிகளுக்கு நோய் நொடிகள் வராது, அவர்களது அழகும், செல்வமும் அதிகரிக்கும், எதிர்காலத்தில் நல்ல வரன்கள் அமையும் என்பது நம்பிக்கை. 

17b5f97a4d18da7f476b728cae3f18da

கடந்த 1997-ம் ஆண்டு பிப்ரவரி 23-ந்தேதி நடந்த பொங்கல் நிகழ்ச்சியில் 15 லட்சம் பெண்கள் கலந்து கொண்டனர். அது கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் முதன் முதலில் இடம்பிடித்தது. இதேபோல் 2009-ம் ஆண்டு மார்ச் 10-ந் தேதி நடந்த பொங்கல் விழாவின் போது அதை விட அதிகமாக 25 லட்சம் பெண்கள் கலந்து கொண்டு பொங்கல் வைத்தனர். இதனால் முந்தைய சாதனையை முறியடித்து மீண்டும் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இந்த பொங்காலை விழா மீண்டும் இடம் பிடித்தது. தமிழர்களின் காவிய நாயகியான கண்ணகியின் தெய்வ வடிவாக வணங்கப்படும் ஆற்றுக்கால் பகவதி, கேரளத்துப் பெண்களால் ஆட்டுக்காலம்மா என்று வாஞ்சையுடன் வணங்கப்படுகிறார். ஆட்டுக்காலம்மாவின் அருள் இந்த உலகை நிரப்பட்டும்.

 

 

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews