தமிழகத்தில் இன்றும் 4000க்கும் அதிக கொரோனா பாதிப்பு: ஆனால் சென்னை மக்கள் மகிழ்ச்சி

தமிழகத்தில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த எண்ணிக்கையை சுகாதாரத்துறை சற்றுமுன் வெளியிட்டுள்ள நிலையில் இதுவரை இல்லாத வகையில் தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் 4280 பேர்களுக்கு கொரோனா தொற்று பரவி இருப்பதாகவும் இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,07,001 ஆக உயர்ந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சென்னையில் இன்று மட்டும் 1842 பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் சென்னையில் கொரோனா பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 66,538 ஆக உயர்ந்துள்ளதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. சென்னையில் கடந்த சில நாட்களாக கொரோனாவின் பாதிப்பு 2000ஐ தாண்டியிருந்த நிலையில் இன்று 2000க்கும் குறைந்துள்ளது சென்னை மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மேலும் தமிழகத்தில் இன்று கொரோனாவுக்கு 65 பேர் பலியாகியுள்ளனர். இதனையடுத்து தமிழகத்தில் மொத்தம் 1,450 பேர் பலியாகியுள்ளனர். மேலும் தமிழகத்தில் இன்று 2214 பேர் கொரோனாவில் இருந்து குணமாகியுள்ளதாகவும் இதனையடுத்து கொரோனாவில் இருந்து குணமாகியவர்களின் மொத்த எண்ணிக்கை 60,592 ஆக உயர்ந்துள்ளதாகவும் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது

மேலும் தமிழகத்தில் இன்று 36,164 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதாகவும், இதனையடுத்து தமிழகத்தில் மொத்தம் 13,06,884 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டிருப்பதாகவும் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது