புள்ளிப்பட்டியலில் முன்னேறிய வங்கதேசம்…. அணியின் ஒற்றுமைதான் வெற்றிக்குக் காரணம்- கேப்டன்


டான்டன்:

உலக கோப்பை தொடரின் நேற்று ஜூன் 17 ஆம் தேதி நடைபெற்ற போட்டியில் வெஸ்ட் இண்டீசும், வங்க தேச அணியும் களமிறங்கின.

டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 321 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ஹோப் 96 ரன்களும், லீவிஸ் 70 ரன்களும் குவித்தனர்.

பின்னர் 322 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய வங்கதேசம் 41.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 322 ரன்கள் குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

வெற்றியின் ரகசியம் இதுதான்:

வெஸ்ட் இண்டீஸ் பலமான அணி, மிகச் சிறப்பாக ஆடும் தன்மை கொண்ட இதனை எதிர்கொள்ள வங்காளதேசம் சிறப்பான பயிற்சிகள் செய்து வந்தது. ஆனால், அது மட்டும் போதாது, முறையான திட்டமிடலே வெற்றிக்கு வழிவகுக்கும் என்று எண்ணி ஆட்டத்தில் சில மாற்றங்களைக் கொண்டு வந்தனர்.

ஆம், 3வது வீரராக களம் இறங்க வேண்டிய நபரை, 5வது வீரராக களம் இறக்கியதே அந்த புது மாற்றமாகும், இதுதான் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தது என்று வங்கதேச கேப்டன் மோர்டாசா கூறியிருக்கிறார்.

புள்ளிப்பட்டியலில் முன்னேறிய வங்கதேசம்…. அணியின் ஒற்றுமைதான் வெற்றிக்குக் காரணம்- கேப்டன்

ஷகிப் அல்ஹசன் சாதனை

இந்த உலக கோப்பை போட்டியில் வங்காளதேச வீரர் ஷகிப் அல்-ஹசன் தொடர்ச்சியாக அடித்த 2-வது சதம் இதுவாகும். இங்கிலாந்துக்கு எதிரான முந்தைய லீக் ஆட்டத்தில் அவர் 121 ரன்கள் எடுத்து இருந்தார். ஷகிப் அல்-ஹசன் இந்த போட்டி தொடரில் அதிக ரன்கள் குவித்து முதலிடத்தில் இருக்கிறார். அவர் இதுவரை 4 ஆட்டத்தில் ஆடி 384 ரன்கள் எடுத்து உள்ளார். அத்துடன் அவர் உலக கோப்பை தொடர் ஒன்றில் அதிக ரன்கள் குவித்த வங்காளதேச வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.

அணி வீரர்களின் ஒற்றுமை:

பவுலர்கள் புதுமையான முறைகளைக் கையாண்டு சிறப்பாகப் பந்து வீசினார்கள். வெஸ்ட் இண்டீஸ் மிகச் சிறப்பாக விளையாடிய போதிலும், அதிக விக்கெட்டுகள் கேட்ச் முறையிலேயே எடுக்கப்பட்டது. பவுலர்கள் மற்றும் விக்கெட் கீப்பர்கள் வெஸ்ட் இண்டீஸின் விக்கெட்டை எளிதில் வீழ்த்திவிட்டனர்.

ஒத்துழைப்புக் கொடுத்த லிட்டன் தாஸ்:

ரஹீம்,  சவுமியா சர்க்கார் மற்றும் தமீம் ஆகியோரும் சிறப்பாக விளையாடினர். லிட்டன் தாஸ் வழக்கமாக 3 வதாகத் தான் விளையாடுவார். ஆனால் அவரை 5வது இடத்தில் ஆடும்படி கேப்டன் கேட்டுக் கொண்டதற்கு, அவரும் அதனை ஏற்று விளையாட, அதுவே வெற்றிக்கு காரணமாக அமைந்தது.

புள்ளிப்பட்டியலில் முன்னேறிய வங்கதேசம்:

இந்த வெற்றியின் மூலம் 5 ஆட்டங்களில் 5 புள்ளிகள் பெற்று 5வது இடத்திற்கு முன்னேறி இருக்கிறது வங்கதேசம். அதே நேரத்தில், 5 ஆட்டங்களில் வெறும் 3 புள்ளிகள் மட்டுமே பெற்றுள்ள வெஸ்ட் இண்டீஸ் 7வது இடத்திற்கு தள்ளப்பட்டு உள்ளது.