நடந்து செல்பவர்களுக்கு பாதுகாப்பான நகரமாகும் சென்னை: டாக்டர் ராமதாஸ் பாராட்டு

சென்னை உயர்நீதிமன்றம் நேற்று அளித்த ஒரு உத்தரவில் சென்னையில் உள்ள நடைபாதைகளில் ஆக்கிரமித்து போட்டிருக்கும் கடைகளைஅகற்ற வேண்டும் என்று உத்தரவிட்டு உள்ளது. இதனை அடுத்து இந்த பணியில் விரைவில் மாநகராட்சி அதிரடியாக இறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

நடைபாதைக்கு என்று போடப்பட்ட பாதையில் கடைகள் போட்டு ஆக்கிரமிப்பு செய்வதால் பெரும்பாலான பாதசாரிகள் அவதியுற்று வருகின்றனர். குறிப்பாக பலர் தங்கள் இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்களை நடைபாதையில் பார்க்கிங் செய்வதால் பெரும் பிரச்சனை ஏற்படுகிறது

இந்த நிலையில் இந்த பிரச்சினை குறித்து பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் நடைபாதைகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் அனைத்து வாகனங்களையும் அகற்றும்படி சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

நடைபாதைகள் நடப்பவர்களுக்கு சொந்தமானவை. அவை அவர்களுக்கு மீட்டெடுத்து வழங்கப்பட வேண்டும்! 
சென்னையில் நடைபாதைகள் வாகன நிறுத்தங்களாகவும், இருசக்கர ஊர்தி செல்லும் பாதைகளாகவும் மாறி விட்டன என கடந்த செப்டம்பர் 13ஆம் தேதி கவலை தெரிவித்திருந்தேன். அதற்கு உயர்நீதிமன்றம் மூலம் தீர்வு கிடைத்திருப்பதில் திருப்தி.

இனியாவது சென்னை நடப்பவர்களுக்கு பாதுகாப்பான நகரமாக மாறட்டும்!
சென்னை சந்தித்து வரும் பிரச்சினைகளுக்கு தீர்வு அடுக்குமாடி வாகன நிறுத்தங்கள் அல்ல. அதிவிரைவு பேருந்து தடங்கள், தொடர்வண்டிகள் உள்ளிட்ட பொதுப்போக்குவரத்தை வலுப்படுத்தி, தனியார் வாகனங்களின் எண்ணிக்கையை குறைப்பது தான் என்பதை அரசும், மக்களும் உணர வேண்டும்! இவ்வாறு டாக்டர் ராம்தாஸ் தெரிவித்துள்ளார்.