Connect with us

தமிழக ஊடகத்துறையிலும் புகுந்த கொரோனா: ராஜ்டிவி கேமிராமேன் பலி

செய்திகள்

தமிழக ஊடகத்துறையிலும் புகுந்த கொரோனா: ராஜ்டிவி கேமிராமேன் பலி

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி ஆயிரக்கணக்கானோர்களை பாதித்தும், நூற்றுக்கணக்கானோர்களின் உயிரை பலிவாங்கியும் வருகிறது. மேலும் ஏழை, எளியவர், பணக்காரர், பாமரர் என்ற வித்தியாசமின்றி அனைத்து தரப்பினர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

குறிப்பாக அரசியல் பிரபலங்களும் பாதிக்கப்பட்டும், பலியாகியும் வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் தற்போது உயிர்க்கொல்லியான கொரோனா ஊடகத் துறையில் உள்ள ஒருவரின் உயிரையும் பறித்துள்ள செய்தி பேரதிர்ச்சியாக உள்ளது.

தனியார் தொலைக்காட்சியான ராஜ் டிவியில் ஒளிப்பதிவாளராக பணிபுரிந்து வந்த வேல்முருகன் என்பவருக்கு சமீபத்தில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து அவர் சென்னையில் உள்ள மருத்துவமனையில் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் இன்று அதிகாலை வேல்முருகன் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்துவிட்டதாக தகவல் வெளிவந்துள்ளது. இந்த தகவல் ஊடகத்துறையில் உள்ளவர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் தமிழக ஊடகத்துறையில் கொரோனா வைரஸால் பலியான முதல் நபர் இவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது

கொரோனா வைரஸ் குறித்த செய்திகளை சேகரிக்க செல்லும் பத்திரிகையாளர்கள், கேமிராமேன்கள் முகக்கவசம் உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்களை கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது

Continue Reading
To Top